உத்தரகாண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத்துக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உத்தரகண்ட மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அவர் 2017-ம் ஆண்டு வரை அம்மாநில முதல்வராக பொறுப்பு வகித்து வந்தார். 2017-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை தழுவியதை அடுத்து அவர் பதவி விலகினார்.

ஹரீஷ் ராவத் போட்டியிட்ட ஹரித்வார் மற்றும் கிச்சா ஆகிய இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். இதன்பிறகு காங்கிரஸ் பொதுச்செயலாளராக பதவி வகித்தார். கடந்த மக்களவைத் தேர்தலிலும் உத்தரகண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. இதைடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 

இந்நிலையில், ஹரிஷ் ராவத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹரிஷ் ராவத்தின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். அவரது உடல்நிலை குறித்த அறிக்கையை மேக்ஸ் மருத்துவமனை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.