முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அறிவாளி மற்றும் சாதுரியம் மிக்கவர் என்பதால் இதுபோன்ற சட்டவிரோத பணப்பரிமாற்றங்களில் ஈடுபட முடிந்தது என உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. 

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் அமலாக்கத்துறை தன்னை கைது செய்வதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த விசாரணையின் போது, ''சிதம்பரம் அறிவாளி, சாதுர்யம் மிக்கவர். சிதம்பரத்தை கைது செய்தது அனைத்தும் சட்டப்படியே நடந்துள்ளது. சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகளை நாம் கோரி வருகிறோம். அவ்வாறு கிடைக்கும் பணத்தை பயன்படுத்துவதும் குற்றமே'' என்று அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மேத்தா வாதிட்டார். 

மேலும், ப.சிதம்பரத்தை கைது செய்தது பழிவாங்கும் செயலோ, வேட்டையாடுதலோ அல்ல, வலுவான ஆதாரங்கள் இருப்பதால் தான் கைது செய்துள்ளோம். வெளிநாட்டில் சொத்து இருப்பதற்கான அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது. நீதிமன்றம் கோரினால் அதை தாக்கல் செய்ய தயாராகவே இருக்கிறோம். 

இந்த வழக்கில் இருந்து ப.சிதம்பரம் தப்பிக்க முயற்சிக்கிறாரே தவிர ஒத்துழைப்பு வழங்கவில்லை. வீடு, சொத்துகளின் விவரம், நிறுவனங்கள் என வழக்கில் தொடர்புடைய பல ஆதாரங்கள் வெளிநாட்டு வங்கி மூலம் கிடைத்துள்ளன. இந்நிலையில், உச்ச நீதிமன்றம் தலையிடுவது எங்களது சட்ட உரிமைகளில் தலையிடுவதாக அமையும் என அமலாக்கத்துறை சார்பில் வாதிடப்பட்டது.