அதிக புகார்கள் தொடர்ந்து வந்த நிலையில் கேரள அரசு போக்குவரத்துக் கழகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்து உத்தரவிட்டிருக்கிறது.
கேரள அரசு போக்குவரத்து கழகம் அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இனி கேரளாவில் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பேருந்து பயணத்தின் போது, சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவோர் குறித்து தகவல் தெரிவிக்க, வசதியாக இந்த அறிவிப்பினை அனைத்து பேருந்துகளின் தகவல் பலகையில் இடம் பெற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரயில்களில் பயணம் செய்பவர்கள் சத்தமாகப் பேச மற்றும் செல்போனில் சத்தமாக பாட்டுக் கேட்கத் தடை விதிக்கப்படுகிறது என கடந்த மாதம் ஜனவரியன்று இந்திய ரயில்வே நிர்வாகம் புதிய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.
மேலும் இரவு 10 மணிக்குப் பிறகு அனைத்து விளக்குகளையும் அணைக்க வேண்டும். அதேபோல் பயணிகள் தங்களுக்கு அசௌகரியமாக இருப்பதாகப் புகார் அளித்தால் உடனே ரயில்வே போலிஸார் மற்றும் டிக்கெட் பரிசோதகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயணிகளிடம் ரயில்வே ஊழியர்கள் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். முதியவர்கள், ஊனமுற்றோர், பெண் பயணிகளுக்கு ரயில்வே ஊழியர்கள் உதவியாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
