நாட்டில் உள்ள சாமானிய மக்களுக்கும் வாழ்க்கையில் ஒருநாள் விமானப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்ற கனவு அடுத்த ஆண்டு அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

நகரங்களுக்கு இடையே ஒரு மணிநேரப் பயணத்துக்கு குறைந்தபட்சம் ரூ.2,500 செலுத்தினால் பயணிக்கலாம் என்ற திட்டம் அடுத்த ஆண்டு ஜனவரியில் அமலாகும் எனத் தெரிகிறது. 

நகரங்களுக்கு இடையே விமானப்பயணத்தை குறைந்த செலவில் இயக்கும் ‘உதான்’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஜூன் மாதம் தொடங்கி வைத்ததார். இந்த திட்டத்தின் படி, சாமானிய மக்களுக்கும் விமானப்பயணம் வாழ்க்கையில் ஒரு முறை சாத்தியமாகும் என்பதாகும். 

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய விமானப்போக்குவரத்து அமைச்சகம் தீவிரமாக செயல்படுத்திவரும் நிலையில் அடுத்த ஆண்டு நடைமுறைக்கு வரும் எனத் தெரிகிறது. 

இது குறித்து விமானப்போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூ கூறுகையில், “ நகரங்களுக்கு இடையிலான விமானப்போக்குவரத்து அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தின்படி குறைந்தபட்சம் கட்டணம் ரூ. 2500 ஆக இருக்கும்'' எனத் தெரிவித்தார்.