Asianet News TamilAsianet News Tamil

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்: சோதனைக் கட்டத்தை தாண்டுமா இந்தியா கூட்டணி?

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு உண்மையான சோதனையாக இருக்கலாம் என கருதப்படுகிறது

Five state assembly election seat sharing may pose a real test for INDIA bloc smp
Author
First Published Oct 15, 2023, 11:44 AM IST

எதிர்வரவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. ஆனால், அதற்கு முன்னதாக மத்தியப்பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலத் தேர்தல்கள் மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுவதால், கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேசமயம், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிராக ஓரணியில்  திரண்டுள்ள கட்சிகள், மாநில அளவில் எதிரும்புதிருமாக இருக்கக் கூடியவை. எனவே, ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தொகுதிப் பங்கீடு இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு ஒரு உண்மையான சோதனையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

ஆம் ஆத்மி மற்றும் சமாஜ்வாடி போன்ற இந்தியக் கூட்டணியின் கூட்டணிக் கட்சிகள் காங்கிரஸுக்கு எதிராக ஐந்து மாநில தேர்தல்களில் மாநில அளவில் களமிறங்கினாலும், உள்ளூர் விவகாரங்களை பேசும் மாநிலத் தேர்தல்கள், தேசிய அளவில் தடையாக இருக்காது என்று அதன் தலைவர்கள் கருதுகின்றனர்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி, சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது மூன்றாவது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. மொத்தம் 90 உறுப்பினர்களைக் கொண்ட அம்மாநில சட்டமன்றத் தேர்தலுக்கு, இதுவரை 33 வேட்பாளர்களை ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் தவிர, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானிலும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தானில், காங்கிரஸ் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சிக்கும் அதே வேளையில், மத்தியப் பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்தி, அம்மாநிலத்தின் அதிகாரத்தை மீட்டெடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி உள்ளது. காங்கிரஸ் வலுவாக உள்ள மத்தியப் பிரதேசத்தில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி 7 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி நடந்த இந்திய கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டத்திற்குப் பிறகு, மாநிலங்களுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குவோம் என்று கூட்டணி கட்சிகள் தெரிவித்தன. இதையடுத்து, தொகுதிப் பங்கீட்டில் கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை என்று வெளியான தகவலுக்கு, இந்திய கூட்டணியின் முக்கிய கவனம் தேசியத் தேர்தல் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் கன்ஷியாம் திவாரி தெரிவித்தார்.

சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக சாலை வசதி பெறும் கிராமங்கள்!

“மாநிலத் தேர்தல்கள் பெரும்பாலும் உள்ளூர் பிரச்சினைகளை மையாக கொண்டுள்ளன. அதில், கூட்டணியாக செயல்பட்டு தொகுதி பங்கீடு சுமூகமாக நடந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் நாங்கள் அதை ஒரு தடையாக பார்க்கவில்லை. 2024 தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு எதிராக ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதை இந்திய அணி இலக்காகக் கொண்டுள்ளது.” என்று கன்ஷியாம் திவாரி தெரிவித்துள்ளார்.

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபடவில்லை என்றாலும், காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாடி உயர்மட்டத் தலைமைக்கு இடையே தொகுதி பங்கீடு குறித்து கன்ஷியாம் திவாரி சுட்டிக் காட்டினார். “மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி வலுவாக இருப்பதால், இந்திய கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சியுடனும் விவாதிக்க வேண்டிய பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. அதன்மூலம் அரசியல், வேட்பாளர் ஆதரவு அக்கட்சிக்கு கிடைக்கலாம்.” என அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸுடன் இடதுசாரிக் கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் ஒப்பந்தம் போடப்படும் என்றும் இந்தியக் கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும் சிபிஐ தலைவருமான டி.ராஜா தெரிவித்துள்ளார். வாக்குகள் சிதறுவதை பாஜக பயன்படுத்திக் கொள்ளாமல் தடுப்பதே எங்கள் கூட்டணிக் கட்சிகளின் முதன்மையான நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios