பிரதமர் மோடியின் பிட்னெஸ் சேலஞ்சுக்கு எதிர்வினையாக பெட்ரோல் பங்க்கில் கேரள இளைஞர் காங்கிரசார் உடற்பயிற்சி செய்யும் நூதன போராட்டம் நடத்தினர்.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி விடுத்த உடற்பயிற்சி சவாலை ஏற்றுக் கொள்வதாக பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்திருந்தார். இடைவிடாது புஷ் அப்-கள் செய்த வீடியோவை வெளியிட்ட விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், விராட் கோலி, ஹிருத்திக் ரோசன், சாய்னா நேவால் ஆகியோருக்கு சவால் விடுத்தார். இதைத் தொடர்ந்து விராட்கோலி தனது உடற்பயிற்சி காட்சிகளை வெளியிட்டார்.

பிரதமர் மோடி, தோனி, தமது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு பதில் சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில், விராட் கோலியின் சவாலை ஏற்றுக் கொள்வதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, தமது உடல் திறனை நிரூபிக்கும் உடற்பயிற்சி காட்சிகளை விரைவில் பகிர உள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதற்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பெட்ரோல் விலை உயர்வைக் கட்டுப்படுத்துங்கள் என்று மோடிக்கு சவால் விடுத்தருந்தார். இந்த நிலையில், திருவனந்தபுரத்தில் கேரள இளைஞர் காங்கிரசார் நூதன முறையில் போராட்டம் நடத்தியுள்ளனர்.

அங்குள்ள பெட்ரோல் நிலையம் முன்பு, தாங்கள் உடற்பயிற்சி செய்வது போன்று புஷ் அப் செய்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.