புதுடெல்லி, ஜன. 6-

நாட்டில் உயர்பண மதிப்பிழத்தல் நடவடிக்கைக்குப்பின், பாதிக்கப்பட்டு, வேதனையில் வாடும் ஏழை மக்கள் மீது மத்திய, மாநில அரசுகள் அதிக அக்கறை எடுப்பது அவசியம் என்று குடியரசுத் தலைவர் பிராணப்முகர்ஜி அறிவுறுத்தியுள்ளார்.

முதலில் வரவேற்பு

நாட்டில் ஊழல், கருப்பு பணத்தை ஒழிக்க கடந்த நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி ரூ.500,ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அப்போது இந்த நடவடிக்கையை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வரவேற்றுப் பேசினார்.

அதன்பின், டிசம்பர் மாத இறுதியில் ஆந்திரமாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரணாப் முகர்ஜி பங்கேற்று வந்தார். அப்போது, ஆந்திரா, தெலங்கானா வர்த்தகர்கள் கூட்டமைப்பு தொடர்பான மாநாட்டில் பேசிய பிரணாப் முகர்ஜி, “ பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டுதடை அறிவிப்பு இந்தியாவை எதிர்காலத்தில் சிறப்பான பாதைக்கு அழைத்துச்செல்லும்'' எனக் கூறியிருந்தார்.

இப்போது எச்சரிக்கை

இந்நிலையில், மாநிலங்களின் ஆளுநர்கள், துணை நிலை ஆளுநர்களிடம் காணொலி மூலம் குடியரசுதலைவர் மாளிகையில் இருந்தவாரே குடியரசுதலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று உரையாற்றினார்.

அப்போது மத்தியஅரசு, மாநில அரசுகளுக்கு சிறிய எச்சரிக்கையையும் அவர் விடுத்து, ரூபாய் நோட்டு அறிவிப்பால் ஏற்பட்ட பாதிப்பை குறிப்பிட்டு பேசியுள்ளார். அவர் பேசியதாவது-

மந்தநிலை

நாட்டில் ஊழல், கருப்புபணத்தையும் ஒழிக்கும்  வகையில் பிரதமர் நரேந்திர மோடி உயர்பண மதிப்பு இழப்பு நடவடிக்கையை எடுத்துள்ளார். இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதார வளர்ச்சியை தற்காலிகமாக குறைத்து, மந்தநிலையை நோக்கி இட்டுச்செல்லும். இதை ரூபாய் நோட்டு மதிப்பிழத்தல் நடவடிக்கைக்கு பின் தவிர்க்க முடியாது. இதை எதிர்நோக்கித்தான் ஆக வேண்டும்.

அதேசமயம், உயர்மதிப்பு ரூபாய் நோட்டு மதிப்பிழத்தல் நடவடிக்கைக்கு பின் ஏழைமக்கள் கடுமையாகப்பாதித்கப்பட்டு, வேதனையில் வாழ்க்கின்றனர். அவர்கள் மீது கூடுதல் அக்கறையுடன் அரசுகள் இருப்பது அவசியம். இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை நீண்ட காலத்தில்தான் எதிர்பார்க்க முடியும்.

காத்திருப்பார்களா?

ஊழல், கருப்பு பணத்தை ஒழித்து, ஏழைமக்களின் நிலையை மாற்றும் அரசின் இந்த நடவடிக்கையை நான் வரவேற்ற போதிலும், அரசு எடுக்கும் நீண்ட கால கண்ணோட்ட நடவடிக்கைகாக ஏழை மக்கள் நீண்ட காலம் காத்திருப்பார்களா என்பதை உறுதியாகக் கூற முடியாது.

ஆதரவு

நாட்டில் இருந்து வேலையின்மை, சுரண்டல், வறுமை, ஏழ்மை ஆகியவற்றை அகற்ற மத்தியஅரசு எடுக்கும் முயற்சிகளுக்கு சாமானிய மக்கள் உறுதுணையாக இருந்து, ஆதரவு அளித்து வருகிறார்கள்.அதனால் ஏற்படும் சிரமங்களை தாங்கிக்கொண்டு, ஆர்வத்துடன் அரசுக்கு ஒத்துழைத்து வருகிறார்கள். அந்த சமானியமக்களுக்கு உதவி செய்து அக்கறையுடன் கவனிப்பது அவசியம்

இவ்வாறு அவர் பேசினார்.