Fire scare on Telangana Chief Ministers helicopter

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பயணம் செய்த ஹெலிகாப்டரில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த அதிகாரிகள் தீயை அணைத்தனர். இதனால் முதலமைச்சர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கும் விதமாக பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார். 

அதன்படி இன்று காலை கரிம் நகரில் கூட்டத்தை முடித்து கொண்டு அடுத்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஹெலிகாப்டருக்கு வந்துள்ளார் முதலமைச்சர். ஆனால் அப்போது ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதைப்பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் உடனே முதலமைச்சர் சந்திரசேகரராவை தடுத்து நிறுத்தினர். 

ஹெலிகாப்டரின் பின்பகுதியில் சரக்கு வைக்கும் இடத்தில் ஏற்பட்ட தீயை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக தகவல் கொடுத்து அணைத்ததால் சந்திரசேகரராவ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

ஹெலிகாப்டரில் சரக்குகள் வைக்கும் இடத்தில் இருந்த பையில் இருந்த எலக்ட்ரானிக் சாதனம் ஏதோ ஒன்று தீ பிடித்ததே விபத்திற்கு காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அந்தப் பையை அப்புறப்படுத்திய பின்பு சந்திரசேகர ராவ் தனது பயணத்தை தொடர்ந்தார்.