நாட்டின் தலைநகரான டெல்லியின் மத்திய பகுதியில் சாஸ்திரி பவன் என்ற கட்டிடம் அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் மத்திய சட்டத்துறை அமைச்சகம், தகவல் ஒலிபரப்பு, மனித வள மேம்பாட்டுதுறை, கார்பரேட் விவகாரங்கள், ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறை ஆகிய அமைச்சகத்தை சேர்ந்த அலுவலங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், இந்த கட்டிடத்தின் 7வது மாடியில் இன்று காலை திடீரென கரும்புகை வந்தது. இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி தளம் முழுவதும் எரிந்தது. அதிர்ஷ்டவசமாக அப்போது, அந்த கட்டிடத்தில் யாரும் இல்லை.

தகவலறிந்து 4 வாகனங்களில் வந்த தீ அணைப்பு படையினர், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால், பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. அந்த மாடியில் உள்ள அரசு அலுவலகங்களில் இருந்த முக்கிய கோப்புகள் தீக்கிரை ஆகாமல் தப்பின.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஏசி மெஷினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிந்தது. கடந்த 2014ம் ஆண்டு இதே கட்டிடத்தில், இதே 7வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.