ஹரியானாவில் கம்பளி தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஹரியானா மாநிலம் பானிபட்டில் உள்ள கோகத் கிராமத்தில் கம்பளி தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

வழக்‍கம்போல் தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. எளிதில் எரியக்‍ கூடிய பொருட்கள் அதிகம் இருந்ததால், தீ மளமளவென பரவி கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. ஆலையில் இருந்து வெளியே செல்ல ஒரு வழி மட்டுமே இருந்ததால் தொழிலாளர்கள் பலரும் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.

தகவலிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டுள்ளனர். மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.