டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மாலை திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, 34 வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தலைநகர் டெல்லியில் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் எனப்படும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உள்பட பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மின்கசிவு காரணமாக முதல் மற்றும் 2-வது தளத்தில் பற்றிய தீ மளமளவென 5 தளங்களிலும் பற்றி எரிந்தது. உடனே தீ விபத்து தொடர்பாக தீயணைப்பு த்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு பகுதியில் இருந்து 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் பல மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

மேலும், தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் வரவழைக்கப்பட்டு நோயாளிகள் மீட்கப்பட்டனர். தொடர்ந்து மருத்துவமனை வளாகம் முழுவதும் நீர் பாய்ச்சப்பட்டு தீயால் ஏற்பட்ட புகையைப் போக்கவும் வெப்பத்தைத் தணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த விபத்தில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டதால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டதாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். அப்புறப்படுத்தப்பட்ட நோயாளிகள் அனைவரும் இன்று மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தீ விபத்தில் மருத்துவமனை சாதனங்கள், மருந்துகள், மாதிரி ரத்த பரிசோதனைகள் உள்பட ஏராளமான பொருட்களும் ஆவணங்களும் எரிந்து நாசமாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ிசாரணை நடத்தியதில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவந்துள்ளது.