Fight between India -pakistan military... 7 persons killed

எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய வீரரை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர், 4 பேர் காயமடைந்தனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டம், மெகந்தர் பகுதியில் உள்ள சர்வதேச எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் கடந்த சில நாட்களாக பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வந்தனர். சிறிய ரக ராக்கெட்டுகளையும், டாங்கிகள் மூலமும், துப்பாக்கியால் சுட்டும் இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு இந்திய ராணுவம் தரப்பிலும் தகுந்த பதிலடி தரப்பட்டது.

இந்நிலையில், ரஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் நேற்று வீரமரணம் அடைந்தார்.

இதற்கு பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவத்தினர் நேற்று நடத்திய அதிரடி தாக்குதலில் 7 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர், 4 பேர் காயமடைந்தனர். இது குறித்து பாகிஸ்தான் ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் மேஜர் ஜெனர் ஆசிப் காபூர் டுவிட்டரில் பதவிட்டுள்ள செய்தியில், “ கோட்லி பகுதியில் உள்ள எல்லைக் காட்டுப்பாட்டு பகுதியில் இந்திய வீரர்கள் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 4 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர். பதலிடியில் 3 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே எல்லைப்பகுதியில் ஊடுறுவ முயன்ற ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதஅமைப்பைச் சேர்ந்த தீவிரவாதிகள் 6 பேரை இந்திய ராணுவத்தினர் இன்று சுட்டுக்கொன்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து ஜம்மு காஷ்மீர் மாநில போலீஸ் டி.ஜி.பி. வைத் கூறுகையில், “ நாங்கள் எல்லைப்பகுதியில் இருந்து 5 தீவிரவாதிகள் உடல்களை மீட்டோம். ஒரு உடலை மட்டும் தேடி வருகிறோம். இவர்கள் அனைவரும் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என நினைக்கிறோம். தற்கொலைப்படை நடத்த திட்டமிட்டு ஊடுறவ முயன்றனர்.

உரி பகுதியில் தீவிரவாதிகள் ஊடுறுவ தயாராக இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து ராணுவத்தினர், போலீசார், துணை ராணுவப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இன்று காலையி்ல் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் சிறிய ரக ராக்கெட் குண்டுகளையும், கையெறி குண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர்’’ என்றார்.