தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளிகளில் அமைக்கப்பட்டுள்ள டோல் கேட்களில் கட்டணம் செலுத்தி விட்டு செல்ல  வாகனங்களுக்கு சில சமயங்கள் நீண்ட நேரமாகிறது. வாகன ஓட்டிகள் சுங்கக் கட்டணங்களை ரொக்கமாக செலுத்துவதால் டோல்கேட்களில் பண பரிமாற்றத்திற்கு கூடுதல் நேரமாகிறது. 

அதனால், மற்ற வாகனங்களும் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகி, டோல்கேட்களில் மிக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

இதனை தவிர்ப்பதற்காக 'பாஸ்டேக்' (FASTag) முறைப்படி, ஆர்எப்ஐடி (RFID - Radio-frequency Identification) சார்ந்த 'பாஸ்டேக்' கார்டு வாகனத்தின் விண்டுஷீல்டில் ஒட்டப்படும். வாகனம் டோல்கேட்டை கடக்கும்போது அதற்குரிய கட்டணம் இதிலிருந்து கழித்து கொள்ளப்படும். இதனால் வாகனங்கள் 10 செகண்ட்களில் சுங்கச் சாவடிகளை கடந்துவிட முடியும்.

சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் பயனாளர்களுக்கு என்று தனியாக 'லேன்' அமைக்கப்படும். இன்னும் 4 மாதங்களில் அனைத்து வாகனங்களுக்கும் 'பாஸ்டேக்' முறையை மத்திய அரசு கட்டாயம்  கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் 'எலெக்ட்ரானிக் டோல் கலெக்ஷன்' கட்டாயமாக்க வாய்ப்புள்ளது. 

அதற்குள், நாட்டின் அனைத்து சுங்கச்சாவடிகளும் 'பாஸ்டேக்' லேன்களாக மாற்றப்பட்டு இருக்கும். இதனை உறுதி செய்யும் விதத்தில், நாட்டின் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் 'இ-டோலிங்' அமக்கும் பணி 75 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.