ஏ.டி.எம்.களில் பணம் எடுக்க இன்னும் மக்கள் காத்திருக்கின்ற நிலையில், டெல்லி சங்கம் விகார் பகுதியில், கால்கடுக்க நின்று பணம் எடுத்த ஒருவருக்கு , ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு பதிலாக குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுகள் வந்தது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

புதிய ரூ. 2 ஆயிரம் நோட்டு

நாட்டில் கருப்புபணம், கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் ரூ.1000, ரூ.500 நோட்டுகளை தடை செய்து கடந்த ஆண்டு நவம்பர் 8-ந்தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து புதிய ரூ.2 ஆயிரம் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த நோட்டுகளில் 17 பாதுகாப்பு அம்சங்கள் இருந்ததால், போலியாக தயாரிக்க முடியாது என அரசு, ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விளையாட்டுப்பொருளா?

இருப்பினும், குழந்தைகள் விளையாடும் ரூபாய் நோட்டுபோல் அளவிலும், வண்ணமும் இருப்பதாக பெரும்பாலான மக்கள் கருதுகின்றனர்.

அதிர்ச்சி

இந்நிலையில் தெற்கு டெல்லி, சங்கம் விகார் பகுதியில் கடந்த 6-ந்தேதி ரோகித் என்பவர் அங்குள்ள எஸ்.பி.ஐ. வங்கி ஏ.டி.எம். மையத்தில் ரூ. 8 ஆயிரம் பணம் எடுத்துள்ளார்.

அப்போது அதில் 4 ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வந்துள்ளன. அந்த நோட்டுகளை எடுத்துப்பார்த்த ரோகித்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த ரூபாய் நோட்டுகளில் நான்கு 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள், குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டுகளாக இருந்தன.

போலி நோட்டு

இந்திய ரிசர்வ் வங்கி என்று அச்சிடப்பட்ட இடத்தில் ‘சில்ட்ரன் பேங்க் ஆப் இந்தியா’ (children bank of india)என்ற பெயரிலும், ரிசர்வ் வங்கி கவர்னர் கையொப்பம் இடும் இடத்தில் பி.கே என்ற அடையாளமும் இருந்தது.

புகார்

இதையடுத்து, அப்பகுதியில் உள்ள போலீஸ் நிலையத்தில் ரோகித் புகார் செய்தார். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ ஏ.டி.எம். மையத்தில் போலி ரூ.2 ஆயிரம் நோட்டுகள் வந்தன என்று ரோகித் என்பவர் புகார் செய்துள்ளார்.

இதுவரை யாரும் இதுபோல் புகார் செய்ததில்லை, இது குறித்து விசாரணை நடத்துவோம்'' என்றார்.

பூஜ்யமாக இருந்தது

போலி ரூபாய் நோட்டு வந்தது குறித்து ரோகித் கூறுகையில், “ நான் டெல்லி சத்ரபூர்பகுதியில் உள்ள கால்சென்டரில் பணியாற்றுகிறேன்.

கடந்த 6-ந்தேதி எனது வங்கிக்கணக்கில் இருந்து பணம் எடுக்க எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்துக்கு சென்றேன். அப்போது ரூ. 8 ஆயிரம் எடுத்தபோது, அதில் இருந்த நான்கு ரூ.2 ஆயிரம் நோட்டுகளும் போலியானதாக இருந்தது. ரூபாய் நோட்டில் சீரியல் நம்பர்கள் அனைத்தும் பூஜ்யமாக இருந்தன'' என்றார்.