Exit Poll Result 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்போது? - முழு விவரம்!

மக்களவைத் தேர்தல் 2024க்கான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தொடர்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

Exit Poll Result 2024 to be out after last phase of Lok Sabha voting on June 1 check details about Time date smp

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஏற்கனவே ஆறு கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதி கட்ட வாக்குப்பதிவு வருகிற ஜூன் 1ஆம் தேதி (நாளை) நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இறுதிகட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், மக்களவை தேர்தல் 2024க்கான தேர்தல் பிரசாரம் நாடு முழுவதுமாக நேற்று மாலை நிறைவடைந்தது. 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தின் 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது.

முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் 19ஆம் தேதியன்று முதற்கட்டமாக 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 21ஆம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளுக்கும், மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதி 11 மாநிலங்களில் உள்ள 93 மக்களவைத் தொகுதிகளுக்கும், நான்காம் கட்டமாக மே 13ஆம் தேதி 10 மாநிலங்களில் உள்ள 96 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஐந்தாம் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 49 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஆறாம் கட்டமாக 8 மாநிலங்களில் உள்ள 58 மக்களவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஏழாவது மற்றும் இறுதிகட்டமாக ஜூன் 1ஆம் தேதி 8 மாநிலங்களில் உள்ள 57 மக்களவைத் தொகுதிகளுக்கும், ஒடிசா மாநிலத்தின் 42 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

மக்களவைத் தேர்தலில் ஹாட்ரிக் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க பாஜக முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இந்தியா கூட்டணி எனும் பெயரில் ஓரணியில் திரண்டுள்ளன.

இந்த நிலையில், ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவுக்கு முடிந்த பின்னர், வெளியாகவுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. பல்வேறு ஏஜென்சிகளால் நடத்தப்படும் இந்த கருத்துக்கணிப்புகள் வாக்காளர்களின் மனநிலையை அளவிடுவதிலும், அடுத்த நாடாளுமன்றம் அமைவதை கணிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் துல்லியமாக இல்லாவிட்டாலும், அவை வாக்களிக்கும் போக்குகள் மற்றும் வாக்காளர் உணர்வில் சாத்தியமான சில விஷயங்களை எடுத்துரைக்கின்றன.

பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

மக்களவைத் தேர்தல் 2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் எப்போது?


தேர்தல் ஆணையத்தின் விதிமுறையின்படி, இறுதிகட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த பின்னர் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியிடப்பட வேண்டும். அதன்படி, ஜூன் 1 ஆம் தேதி மாலை 6:30 மணிக்குப் பிறகு வெவ்வேறு ஊடக நிறுவனங்கள் நடத்திய பல்வேறு கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

மக்களவைத் தேர்தல் 2024 முடிவுகள் எப்போது?


மக்களவைத் தேர்தல் 2024க்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்படவுள்ளன. வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. மதியம் 2 மணிக்குள் பெரும்பான்மையான போக்குள் பற்றி தெரிய வரும் எனவும், இறுதி முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி இரவு 8 மணிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தொகுதிக்குமான வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன், தேர்தல் ஆணையத்தால் தொகுதி வாரியான முடிவுகள் வெளியிடப்படும்.

மக்களவைத் தேர்தல் 2014 மற்றும் 2019இல் என்ன நடந்தது?


16ஆவது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல், 2014ஆம் ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை ஒன்பது கட்டங்களாக நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாஜக 31 சதவீத வாக்குகளைப் பெற்று 282 இடங்களில் தனித்து வெற்றி பெற்று, அதற்கு முன்பு 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசை வெளியேற்றியது.

அந்த தேர்தலில் நாடு முழுவதும் 38.5 சதவீத வாக்குகளை பெற்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 59 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று தோல்வியை தழுவியது. காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

அதேபோல், 17ஆவது மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல், 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. ஆளும் பாஜக 37 சதவீத வாக்குகளைப் பெற்று 303 இடங்களில் வெற்றி பெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 45 சதவீத வாக்குகளைப் 353 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களில் வெற்றி பெற்று தோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி மட்டும் தனித்து 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதர கட்சிகள் 98 இடங்களில் வெற்றி பெற்றன.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios