கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!
கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் வீனா விஜயன் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது
கேரள முதல்வர் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் மற்றும் அவரது ஐடி நிறுவனம் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கனிமவள நிறுவனம் ஒன்று வீனா விஜயனின் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக பணம் செலுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தின் புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கை பதிவு செய்துள்ளதாகவும், இந்த விவகாரத்தை விசாரிக்க மத்திய அரசு கேட்டுக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொச்சியைச் சேர்ந்த கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) என்ற தனியார் நிறுவனம், 2017 மற்றும் 2018 க்கு இடைப்பட்ட காலத்தில், வீனா விஜயனுக்குச் சொந்தமான எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு, ரூ1.72 கோடி செலுத்தியதாக குற்றம் சாட்டப்படுகிறது.
விசிகவுக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு!
ஒரு முக்கிய நபருடன் வீனா விஜயனுக்கு உள்ள தொடர்பு காரணமாக, கொச்சின் மினரல்ஸ் அண்ட் ரூட்டில் லிமிடெட் நிறுவனத்திற்கு எந்த சேவையும் வழங்கவில்லை என்றாலும், எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்திற்கு மாதந்தோறும் பணம் செலுத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
முன்னதாக, தீவிர மோசடி விசாரணை அலுவலகத்தின் விசாரணைக்கு எதிராக வீனா விஜயனின் எக்ஸாலாஜிக் நிறுவனம் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. ஆனால், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது.
கடந்த ஜனவரி மாதம் கேரள சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் பினராயி விஜயன், தனது மனைவியின் ஓய்வூதிய நிதியைப் பயன்படுத்தி தனது மகள் நிறுவனம் தொடங்கியுள்ளார் என்றும், தன் மீதும், தனது குடும்பத்தினர் மீதும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.