பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், கட்டுக்கட்டாக பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

பணப்பரிமாற்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள டெல்லி அமைச்சர் சத்யேந்திர ஜெயினின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில், கட்டுக்கட்டாக பணம் மற்றும் கிலோ கணக்கில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசின் அமைச்சர் கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் 2015-16 ஆம் ஆண்டில் ஹவாலா பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக விசாரணை நிறுவனம் குற்றம் சாட்டியது. இதை அடுத்து ரூ.1.62 கோடி வரை பணமோசடி செய்ததாக மத்திய புலனாய்வுத் துறை கடந்த ஆகஸ்ட் 2017ல் சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தது.

முறைகேடாக சம்பாதித்த பணத்தை தன் குடும்பத்தினர் பெயரிலான போலி நிறுவனங்களில் அவர் முதலீடு செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் 2018ல் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதன் அடிப்படையில், பணப்பரிமாற்ற மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்தது. சத்யேந்திர ஜெயினின் குடும்பத்தினர் பெயரில் இருந்த 4.81 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை கடந்த ஏப்ரலில் பறிமுதல் செய்தது. மே 30ல் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டார். அவரை 9ம் தேதி வரை காவலில் எடுத்து அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

விசாரணையின் போது அவர் அளித்த தகவல்களை உறுதி செய்யவும், மேற்கொண்டு ஆதாரங்களை திரட்டவும் டில்லியில் உள்ள சத்யேந்திர ஜெயினின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரது உதவியாளர் வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த நிலையில், இந்த சோதனையில் ரூ2.82 கோடி ரொக்கம் மற்றும் 1.80 கிலோ எடை கொண்ட 133 தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.