நாட்டில் போலி நிறுவனங்களைக் கண்டுபிடிக்க அமலாக்கப்பிரிவு கடந்த சில நாட்களுக்கு முன் நடத்திய ரெய்டு தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் பெயர் ஜி.டி. ரெட்டி மற்றும் கே.லியாகத் அலி  என்றும்,  இவர்கள் இருவர்  மீதும்சட்டவிரோத பணப்பரிமாற்றம் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலி நிறுவனங்கள்

பேப்பரில் மட்டும் நிறுவனமாகப் பதிவு செய்து கொண்டு, கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை செய்யும் போலி நிறுவனங்கள் 2 ஆயிரத்துக்கும் அதிகமாக இருப்பதாக பிரதமர் அலுவலகம் கடந்த மாதம் கண்டுபிடித்தது. இது பிரதமர் மோடியின் கருப்பு பண தடுப்பு நடவடிக்கைக்கு எதிராக இந்த போலி நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ரெய்டுக்கு திட்டம்

இதையடுத்து,  வருவாய் துறையினர், கார்ப்பரேட் விவகாரத்துறை ஆகியவற்றின் துணையுடன் அமலாக்கப்பிரிவினர் கடந்த 1-ந்தேதி நாடுமுழுவதும் 16 நகரங்களில், 100-க்கும் மேற்பட்ட இடங்களில் திடீர் ரெய்டு நடத்தினர்.  புதுடெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, சண்டிகர்,கொல்கத்தா, ராஞ்சி, ஆமதாபாத், புவனேஸ்வர் உள்ளிட்ட நகரங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

கருப்புபணம்

இந்த போலி நிறுவனங்கள் ரூபாய் நோட்டு தடையின் போது, கோடிக்கணக்கில் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மாற்றியதும், சட்டவிரோத பணப்பரிமாற்றத்திலும் ஈடுபட்டு, கருப்புபணத்தை வெள்ளையாக மாற்றியது தெரியவந்துள்ளது.

சட்டவிரோத பரிமாற்றம்

கடந்த 3 ஆண்டுகளில் 1500க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்கள் பேப்பர் அளவில் மட்டுமே செயல்பட்டு வருவதாகவும், இதன் மூலம் 22 ஆயிரம் பேர் பயணடைந்து, ரூ.13 ஆயிரம் கோடிக்கு மேல் சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.

இந்நிலையில், அமலாக்கப்பிரிவினரின் இந்த ரெய்டுக்கு பின்னர், 
ஜி.டி. ரெட்டி மற்றும் கே.லியாகத் அலி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது என அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.