பீகாரில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், தற்போது மூளைக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 110-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து அங்கு நோய் பரவியது. முதலில் 130-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அதில் கடந்த மாதம் வரை 11 பேர் உயிரிழந்தனர். ஆனால் இப்போது திடீரென இதன் தாக்கம் அதிகரித்துள்ளது. 

கடந்த நான்கு நாட்களில் மட்டும் 66 குழந்தைகள் உயிரிழந்தனர். நோய் பாதிப்பால் 150-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருந்து வருகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாக முசாபர்பூரில் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் 22-ம் தேதி வரை மூடப்படும் என்றும், மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணிவரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் ஏராளமான குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக, முசாபர்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது.

89 குழந்தைகள் ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையிலும், 19 குழந்தைகள் கெஜ்ரிவால் மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். 110-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார்.