பிரபல வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்!

பிரபல வழக்கறிஞரும், சட்ட நிபுணருமான ஃபாலி நாரிமன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Eminent Jurist Fali S Nariman Passed Away pm modi mk stalin cji condolence smp

பிரபல வழக்கறிஞரும், சட்ட நிபுணருமான ஃபாலி நாரிமன் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 95. வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நிலை பாதிப்பால் அவர் உயிரிழந்துள்ளார். 1950ஆம் ஆண்டில் பாம்பே உயர் நீதிமன்றத்தில் தனது பணியை தொடங்கிய அவர், 1971ஆம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், பார் கவுன்சில் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், சர்வதேச நடுவர் மன்றத்தில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நீதிபதி ஆவார்.

இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற அரசியலமைப்பு வழக்கறிஞர்களில் ஒருவராக இருந்த அவர், பல பிரபல வழக்குகளில் ஆஜராகி திறம்பட வாதிட்டுள்ளார். போபால் விஷவாயு விபத்து வழக்கு, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளில் ஆஜராகி திறம்பட வாதாடிய ஃபாலி நாரிமன், 1999ஆம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளை வழங்கி மத்திய அரசு ஃபாலி நாரிமனை கவுரவப்படுத்தியுள்ளது. இவரது மகன் ரோஹிண்டன் ஃபாலி நாரிமன், உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.

ஃபாலி நாரிமனின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “ஃபாலி நாரிமன் மிகச் சிறந்த சட்ட நிபுணர்கள் மற்றும் அறிவுஜீவிகளில் ஒருவர். சாதாரண மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் தமது வாழ்க்கையை அர்ப்பணித்தார். அவரது மறைவு எனக்கு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.” என பதிவிட்டுள்ளார்.

பிரபல வழக்கறிஞர் பாலி நாரிமன் காலமானார்.. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வாங்கி கொடுத்தவர்..

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “புகழ்பெற்ற சட்டவியல் அறிஞரும் முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலுமான பாலி நரிமன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். வழக்கறிஞராக எழுபதாண்டுகளுக்கும் மேலான தனது பயணத்தில் சுமார் ஐம்பதாண்டுகள் அவர் உச்சநீதிமன்றத்தில் வாதாடியுள்ளார் என்பது வரலாற்றுச் சிறப்புமிக்கதும், குறிப்பிடத்தகுந்த ஒன்றும் ஆகும். பல முக்கியத் தீர்ப்புகளுக்குக் கருவியாக விளங்கிய திரு. பாலி நரிமன் அவர்கள் சட்டவியலுக்கு ஆற்றிய பங்களிப்புகள் தலைமுறை தலைமுறைகளுக்கும் நினைவுகூரப்படும். அன்னாரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக வழக்கறிஞர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

ஃபாலி நாரிமனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், அவர் ஒரு மிகச்சிறந்த அறிவுஜீவி என புகழாரம் சூட்டியுள்ளார். “புகழ்பெற்ற சட்ட வல்லுநர், மூத்த வழக்கறிஞர் மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் சிவில் உரிமைகளின் தீவிர ஆதரவாளர் ஃபாலி எஸ் நாரிமனின் மறைவு சட்ட அமைப்புக்கு மிகப்பெரிய இழப்பு.” என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios