இந்தியாவிலும் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. நாட்டு நலன் கருதி இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். 

இலங்கையின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அந்த நாடு சென்ற அதே பாதையில்தான் இந்தியாவும் சென்றுக்கொண்டிருக்கிறது என்று சிவசேனா எச்சரித்துள்ளது.

பொருளாதார நெருக்கடி

தீவு நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால அந்த நாடு தத்தளித்துக் கொண்டிருக்கிறது. அன்னிய செலவாணி கையிருப்பு தீர்ந்துவிட்டதால், வெளிநாடுகளிலிருந்து எந்தப் பொருளையும் இறக்குமதி செய்ய முடியவில்லை. இலங்கையிலிருந்து ஏற்றுமதியும் நடைபெறாததால், அந்த நாடு பெரும் பொருளாதார சீரழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், உள் நாட்டில் எல்லா பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. தொடர் பண வீக்கம், நாட்டின் கடன் சுமை போன்றவற்றின் காரணமாக அத்தியாவசிப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சிங்கிள் டீ ரூ.100 ரூபாய்க்கு விற்கும் அளவுக்கு விலைவாசி இறக்கைக் கட்டி பறக்கிறது. 

தவிக்கும் இலங்கை

மக்கள் வீதிக்கு வந்து அரசுக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்கள். இலங்கை அரசு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியும் பலன் தரவில்லை. அமைச்சர்கள் வரிசையாக ராஜினாமா செய்து வருகிறார்கள். அதிபரும், பிரதமரும் மட்டும் பதவியில் உள்ளனர். ஆனால், தற்போதைய நிலவரப்படி அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்துவிட்டது. இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நிலை சீராக ஓராண்டுக்கு மேல் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இலங்கைக்கு இந்திய அளவுக்கு மற்ற நாடுகள் எதுவும் உதவ முன்வரவில்லை. இந்நிலையில் இலங்கையின் நிலைமை இந்தியாவுக்கு வரலாம் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எச்சரிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இலங்கை பாதையில் இந்தியா

இலங்கையின் நிலைமை குறித்த சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மும்பையில் பேட்டி அளித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில், “இலங்கையின் நிலைமை மிக மோசமாக உள்ளது. அந்த நாடு சென்ற அதே பாதையில்தான் இந்தியாவும் சென்றுக்கொண்டிருக்கிறது. பண வீக்கத்தை இந்தியா கட்டுப்படுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இலங்கையை விட மோசமான நிலைமைக்கு இந்தியா ஆளாக நேரிடும். இந்தியாவிலும் உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது. நாட்டு நலன் கருதி இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் பண வீக்கத்தை கட்டுப்படுத்த பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் முடிந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை உயர தொடங்கிவிட்டது. இதைப் பற்றி மத்திய அரசு பேசுவதேயில்லை. அரசியலையும் தேர்தலையும் தவிர்த்து மத்திய அரசுக்கு வேறு எதுவும் முக்கியம் இல்லை.” என்று சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.