Education load from SBI they ready recover it

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா(எஸ்.பி.ஐ.) வங்கியில் கல்விக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களிடம் இருந்து கடனை வசூலிப்பதற்காக கடன் மீட்பு நிறுவனங்களை வங்கி நிர்வாகம் அனுகியுள்ளது.

இதனால், கடன் பெற்றவர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று கடனை வசூலிக்கும் பணியில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த பணியாட்கள் ஈடுபட உள்ளனர்.

வங்கிகளில் கல்விக்கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 2015ம் நிதி ஆண்டின் கணக்கின்படி, இந்தியன் வங்கி, எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐ.ஓ.பி., யூ.சி.ஓ. ஆகிய 5 வங்கிகள் கல்விக்கடனாக ரூ.3 ஆயிரத்து536 கோடி வழங்கியது. 2016ம் நிதி ஆண்டில், ரூ.4777 கோடியும், 2017ம் நிதி ஆண்டில் ரூ.5 ஆயிரத்து 192 கோடியாகவும் அதிகரித்துள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையைச் சேர்ந்த இந்தியன் வங்கி நடப்பு நிதி ஆண்டில் ரூ.671 கோடி கல்விக்கடனாகவும், ஸ்டேட் வங்கி ரூ.538 கோடியும் வழங்கியுள்ளன.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சகம் அளித்த தகவலின்படி, 2017ம் ஆண்டு மார்ச் மாதம் வரை எஸ்.பி.ஐ. வங்கிகளின் வாராக்கடனான ரூ.67, 678 கோடியில், 7 சதவீதம் கல்விக்கடனில் வாராக்கடனாக இருக்கிறது. அதாவது, ரூ.5 ஆயிரத்து191 கோடியாகும். இதை வசூலிக்க கடன் மீட்பு நிறுவனங்களை எஸ்.பி.ஐ வங்கி அனுகியுள்ளது.

அதாவது, எஸ்.பி.ஐ. வங்கி முதல்கட்டமாக கல்விக்கடனாக கொடுத்ததில் ரூ.380 கோடி வராக்கடனை கடன் மீட்பு நிறுவனத்துக்கு ஏலம் விட முடிவு செய்துள்ளது. இதன்படி, இந்த ரூ.380 கோடியை அதிகபட்சமாக எந்த கடன் மீட்பு நிறுவனம் ஏலம் எடுத்துக்கொள்கிறதோ அந்த நிறுவனத்துக்குகடன் மீட்பு உரிமம் வழங்கப்படும். அவர்கள் வங்கிகள் செய்யும் பணியை செய்து, கடனை வசூலித்துக்கொள்வார்கள்.

ஏறக்குறைய எஸ்.பி.ஐ. வங்கியில் 20 ஆயிரத்து 891 வங்கிக்கணக்குதாரர்கள் கல்விக்கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் இருந்து வருகிறார்கள். அவர்களிடம் இந்த கடன் மீட்பு நிறுவனங்கள் அனுகி கடனை வசூலிக்கும் பணியைச் செய்வார்கள்.

ஏலத்தில் பங்கேற்கும் கடன் மீட்பு நிறுவனங்கள் ரூ. 152 கோடியை இருப்புத் தொகையாகவும், மீதமானவற்றை பங்குபத்திரங்களாகவும் சமர்பிக்கலாம்.

கடந்த 2016ம் ஆண்டு எஸ்.பி.ஐ. வங்கி கல்விக்கடனில் வாராக்கடனாக இருந்த ரூ.847 கோடியை, ரிலையன்ஸ் சொத்து மீட்பு நிறுவனத்துக்கு கடனை மீட்கும் உரிமத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்த கடன் மீட்பு நிறுவனங்கள் ரிசர்வ் வங்கி விதிமுறைகளுக்கு உட்பட்டு, கடனை வசூலிக்க வேண்டும், கடுமையான நடவடிக்கைகள், தாக்குதல்கள் மூலமாகவோ, கடன் பெற்றநபர்களை துன்புறுத்தக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.