பெங்களூருவில் விலை உயர்ந்த நாய்களை வைத்திருப்பதாகக் கூறி மோசடி செய்து வந்த நபரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. உண்மையில் அவர் உள்நாட்டு நாய்களை வெளிநாட்டு நாய்கள் போல மாற்றி மோசடி செய்து வந்தது தெரியவந்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து அரிய வகை நாயை பல கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாகக் கூறிவந்த பெங்களூருவைச் சேர்ந்த நபரின் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை அதிரடி சோதனை நடத்தியுள்ளது. இதில் அவர் அதிக விலை கொடுத்து நாய்களை வாங்கியதாகச் சொன்னது அனைத்தும் பொய் என்று தெரியவந்துள்ளது.
பெங்களூருவின் பன்னேர்கட்டா சாலையில் உள்ள சதீஷ் என்ற நபரின் வீட்டில் அமலாக்கத்துறை வியாழக்கிழமை சோதனை நடத்தியது. அதிக விலை கொண்ட நாய்களை வைத்திருப்பதாகக் கூறி மோசடி செய்துவருவதாகக் கிடைத்த தகவல்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை (ED) சோதனை நடத்தியது.
எல்லாமே பொய்:
சதீஷ் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நாய்களை வைத்திருப்பதாக கூறி வந்த நிலையில், அவர் சொன்னதை அத்தனையும் பொய் என்று அம்பலமாகியுள்ளது. அவரிடம் உள்ள நாய்கள் அவர் கூறியது போல் விலை உயர்ந்தவை அல்ல என்பது அமலாக்கத்துறை (ED) விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அவர் உள்நாட்டு நாய் இனங்களைத்தான் வெளிநாட்டு இனங்கள் போல மாற்றி இருக்கிறார். அவற்றை வைத்து பலரை ஏமாற்றி வந்துள்ளார்.
வாடகைக்கு வாங்கிய நாய்கள்:
அரிய மற்றும் விலையுயர்ந்த நாய் இனங்களை வைத்திருப்பது போன்ற தவறான பிம்பத்தை உருவாக்க அவர் நாய்களை வாடகைக்கு எடுத்ததும் கண்டறியப்பட்டது. மக்களை ஏமாற்றி, உயர்ரக செல்லப்பிராணிகள் போல விற்பனை செய்திருக்கலாம். அல்லது இந்த நாய்களை பயன்படுத்தி வேறுவிதமான பணமோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மோசடியின் முழு விவரங்களையும் வெளிக்கொணரவும், இவரால் ஏமாற்றப்பட்டிருக்க க்கூடியவர்களை அடையாளம் காணவும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.
