பிரதமர் மோடி தலைமையிலான அரசு 6 மாதங்களில், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சனம் செய்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் நாட்டின் பொருளாதாரம் முழுவதுமாக உடைந்து காணப்படுகிறது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் நாட்டில் வேலை வாய்ப்பின்மை நிலவுகிறது. ஒவ்வொரு நாளும் இந்தியப் பொருளாதாரம் மூழ்கிக் கொண்டே இருக்கிறது. பொருளாதாரம் என்ற மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்துகொண்டே இருக்கின்றன. கடந்த நான்கு மாதங்களில் உணவுப் பொருள் பணவீக்கம் 10 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கெட்ட செய்தி வருகிறது. 

அடுத்த தினம் அதைவிட பயங்கரமான கெட்ட செய்தி வருகிறது. கடந்த 6 மாதத்தில் பிரதமர் மோடி, இந்தியப் பொருளாதாரத்தை உடைத்துவிட்டார். ஆனால், நிதி அமைச்சரோ எல்லாம் சரியாக இருப்பதாகவும், உலக அளவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து வருகிறார். பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசுக்கு எந்த திட்டமும் இல்லை என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.