மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் பற்றி ஒன்றும் தெரியாது. தற்போது நிலவி வரும் பொருளாதார தேக்கநிலையை அவரால் சரி செய்ய முடியாது என்று பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்ரமணியசுவாமி தெரிவித்துள்ளார். 

நாட்டின் உள்நாட்டு உற்பத்தியின் அளவு 5 சதவீதமாக குறைந்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கடந்த காலாண்டைவிட 0.8 சதவிதம் உள்நாட்டு உற்பத்தியின் அளவு குறைந்துள்ளது. கடந்த வருடம் இதே காலாண்டில் உள்நாட்டு உற்பத்தியின் அளவு 7.8 சதவீதமாக இருந்துள்ளது. மத்திய நடவடிக்கைகளின் காரணமாகவே பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. 

இந்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அருண் ஜெட்லி, பியூஷ் கோயல் உள்ளிட்டோரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ப.சிதம்பரம் ஏராளமான ஊழல் செய்துள்ளார். அவர் மீது 7 வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. அவருக்கு, 20 வருடம் சிறை தண்டனை கிடைக்கும். ப.சிதம்பரத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட உள்ளனர். விரைவில் திகார் ஜெயலில் காங்கிரஸ் கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்தலாம் என்று கூறியுள்ளார்.

 

மேலும், பேசுகையில் காங்கிரஸ் செய்த அதிக ஊழல் தான் பொருளாதார மந்த நிலைக்கு ஒரு காரணம். அருண் ஜெட்லிக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது. பிரதமர் மோடி ஒரு வீரர். பல நல்ல செயல்களை செய்துள்ளார். பொருளாதாரத்தில் நல்ல கொள்கை இருக்க வேண்டும். பா.ஜ.க அரசில் இதுவரை பொருளாதார வல்லூர்நர்கள் நிதியமைச்சராக இருந்ததில்லை. மத்திய அரசு மக்களுக்கு புரியாத ஜிஎஸ்டி வரி உள்பட வரி மேல் வரி போட்டு வருவதாக கூறினார்.

 

இந்தியாவில் விவசாயிகளுக்கு சலுகைகள் அறிவிக்க வேண்டும். தேவையான திட்டங்கள் கொண்டு வரப்படவில்லை. அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமனுக்கு பொருளாதாரம் குறித்து எதுவும் தெரியாது. அவரால் தற்போதைய பொருளாதார தேக்கநிலையை சரி செய்ய முடியாது என்று பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.