மக்களவை தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இரு தினங்களுக்கு முன்பு முக்கியமானதொரு அறிவிப்பை வெளியிட்டார். பாஜகவினர் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6 ஆயிரம் நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்கு மாற்றாக வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி அளிக்கப்படும் என்று அறிவித்தார். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பே ராகுல் இந்த அறிவிப்பை வெளியிட்டார். ராகுலின் இந்த அறிவிப்பை பாஜக கிண்டல் செய்துவருகிறது.
இந்நிலையில் ராகுல் காந்தி அறிவித்துள்ள இந்தத் திட்டத்தை அமல்படுத்தவே முடியாது என நிதி ஆயோக் துணை தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியையும் அவர் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில், “நிலவை பிடித்துக் கொடுப்போம் என்ற பழைய வாக்குறுதி பாணியில், காங்கிரஸ் தலைவர் புதிய திட்டத்தை அறிவித்துள்ளார். அது, பணி மனப்பான்மைக்கு எதிராக அமையும்.  நிதி ஒழுங்குமுறையை சிதற செய்துவிடும்.
இதன் செலவு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதமாக இருக்கும். மத்திய பட்ஜெட்டில் 13 சதவீதமாகவும் இருக்கும். இத்திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்றவே முடியாது. காங்கிரசின் முந்தைய கோஷங்களுக்கு ஏற்பட்ட கதிதான் இதற்கும் ஏற்படும்.” என்று தெரிவித்திருந்தார். 
திட்ட கமிஷனுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட நிதி ஆயோக் ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. இந்த அமைப்பின் துணைத் தலைவர் எதிர்க்கட்சி அறிவித்துள்ள ஒரு திட்டத்தை பாஜக தொண்டரை போல விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.
 இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா, “ராஜிவ்குமார், நிடி - ஆயோக் அலுவலகத்திற்கு பதிலாக, பாஜக தலைமை அலுவலகத்திலிருந்து, இந்தக் கருத்துகளைத் தெரிவிருக்கலாம். அவர் மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக போட்டியிடலாம்” என்று தெரிவித்திருந்தார். இதேபோல காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி.சாக்கோ கூறும்போது, “யார் இந்த ராஜிவ்குமார்? காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதி பற்றி குறை கூற, அவருக்கு என்ன தகுதிஉள்ளது? தன் எஜமானர்களுக்கு விசுவாசம் காட்ட வேண்டுமென்றால், பாஜகவில் சேர்ந்து விடலாமே'' என்றார்.

 
ராஜிவ் குமாருக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தலைமை தேர்தல் ஆணையம் சார்பில் ராஜிவ் குமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. “ராஜிவ்குமார் ஓர் அரசு அதிகாரி. அவர் இது போல் பேசியிருக்க கூடாது. இவருடைய கருத் துகள் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளன. இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி”யிருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.