Echoes of terrorist infiltration - Pathankot air base to intensive care

பதான்கோட் விமானப் படை தளத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம், பதான்கோட்டில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு ஜனவரி 2-ம் தேதி ஊடுருவினர். தொடர்ந்து 4 நாட்கள் தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆயினும் இந்திய பாதுகாப்பு படையினர் தீரமுடன் போராடி பதிலடி கொடுத்து, 4 தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். இருப்பினும், இந்த தாக்குதலின்போது, பாதுகாப்பு படை வீரர்கள் 7 பேர் மரணம் அடைந்தனர்,

பதான்கோட் விமானப்படை தளம் மீதான தாக்குதலானது, பாகிஸ்தானில் இருந்து நடத்தப்பட்டது என்பது தொடர்பான ஆவணங்களை இந்திய அரசு ஒப்படைத்தது. இதனையடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு படை மையங்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

ஏற்கனவே தாக்குதலுக்கு இலக்கான பதான்கோட் விமானப்படை தளத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

இந்நிலையில் மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எச்சரிக்கை எழுந்ததை தொடர்ந்து பதான்கோட் விமானப்படை தளத்தில் பாதுகாப்பு படை அதிஉயர் உஷார் நிலையில் நிறுத்தப்பட்டு உள்ளது. பதான்கோட் விமானப்படை தளத்துக்கு மேல் பகுதியில் ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளன.

அங்கு தேடுதல் பணியும் நடைபெற்று வருகிறது என ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பதான்கோட் பிராந்திய காவல்துறை உயர் அதிகாரி நிலாம்ப்ரி விஜய் பேசுகையில், “தேசவிரோத சக்திகள் மையம் கொண்டு உள்ளன என எங்களுக்கு உளவுத்துறை தகவல்கள் கிடைத்து உள்ளது, எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து உள்ளோம்,” என கூறியுள்ளார்.