வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனிக்கு பயணம் மேற்கொண்டு பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாகிஸ்தானுடனான பதட்டங்கள் குறித்து விளக்கமளிக்க உள்ளார். இந்தப் பயணம் மே 19 முதல் 24 வரை நடைபெறும்.
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர், இந்த வாரம் நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக செல்கிறார். இந்த பயணத்தின்போது, ஐரோப்பாவில் உள்ள முக்கியத் தலைவர்களைச் சந்தித்து, பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் பாகிஸ்தானுடனான பதட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கும், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகளுக்கு எதிராக இந்தியா நடத்திய ஆபேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கும் பிறகு, ஜெய்ஷங்கரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் கீழ் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் தொலைதூர ஆயுதங்களைப் பயன்படுத்தி நான்கு நாட்கள் தீவிர மோதல்கள் நடந்தன. பின்னர் இரு நாடுகளும் அமைதி உடன்படிக்கைக்கு வந்தன.
இந்நிலையில், வரும் மே 19 முதல் 24 வரை நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்கள் குறித்து மூன்று நாடுகளின் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கை பற்றியும் ஐரோப்பாவில் உள்ள முக்கியத் தலைவர்களுக்கு விளக்கமளிக்க இந்த பயணம் ஒரு வாய்ப்பாக அமையும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி செல்லவிருந்த மூன்று நாடுகளில் நெதர்லாந்தும் ஒன்று. ஆனால், பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்ததால் அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
ஜெர்மனி ஐரோப்பாவில் இந்தியாவின் ஒரு முக்கியமான மூலோபாய கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. இருதரப்பு வர்த்தகம் 30 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. நெதர்லாந்து மற்றும் டென்மார்க் ஆகியவை பசுமைத் திட்டங்களில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளன.
