கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் தொடங்கிய கொரோனா வைரஸின் கோர தாண்டவம் கிட்டதட்ட அக்டோபர் மாதம் வரையிலும் குறையாமல் இருந்தது. அப்போது கொரோனா தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் முதல் சிறுகுறு வியாபாரிகள் வரை பலரும் பொருளாதார ரீதியாக சரிவை சந்தித்தனர்.    

               

சில மாதங்கள் அமைதியாக இருந்த கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் மீண்டும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலவிதமான தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நாட்டின் மிகவும் முக்கிய வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஹீரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, நாட்டின் பல்வேறு ஊர்களிலும், வெளிநாடுகளிலும் உள்ள ஹீரோ நிறுவன வாகன உற்பத்தி ஆலைகளை தொடர்ந்து 4 நாட்களுக்கு மூட உள்ளதாக தெரிவித்துள்ளது. நாளை முதல் மே 1ம் தேதி வரை 4 நாட்களுக்கு ஆலையை மூடுவதன் மூலமாக ஏற்படும் உற்பத்தி இழப்பு பின்னர் ஈடுகட்டப்படும் என்றும், கொரோனா பரவல் காரணமாகவே ஆலையை மூடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.