மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் மது அருந்திவிட்டு கார் ஓட்டிய பெண்ணை பிடித்து, விசாரித்த போலீஸ் கான்ஸ்டபிளை அந்த பெண் திடீரென கட்டிப்பிடித்து,முத்த மழை பொழிந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது-

கொல்கத்தாவின் மெட்ரோபாலிட்டன் சாலையில், புறவழிச்சாலை அருகே, சால்ட்லேக் பகுதியில் நேற்று முன் தினம் இரவு 30 வயதுமதிப்புடைய ஒரு பெண் கார் ஒட்டி வந்தார். அந்த பெண் மது அருந்தி இருந்ததால், கார் ஒட்டும் போதே நிதானமின்றி இருந்தார். திடீரென கார் ஸ்டீரிங் மீது மயங்கி விழுந்ததால் சாலையில் உள்ள தடுப்பு மீது கார் மோதி நின்றது.

இதையடுத்து, இதைப் பார்த்த அருகில் இருந்த வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் அந்த பெண்ணை காப்பாற்ற முயன்றார். ஆனால், அவரை அந்த பெண் ஓட்டுநரைப் பிடித்துத் தள்ளிவிட்டார்.

அப்போது அதைப் பார்த்த  இரு போலீஸ் கான்ஸ்டபிள்கள் அருகே சென்று அந்த பெண்ணையும், காரில் இருந்த மற்றொரு பெண், ஆணையும் வௌியேகொண்டுவந்தனர். இதில் கார் ஓட்டிய பெண்ணிடம், ஒரு போலீஸ்காரர் விசாரணை நடத்திக் கொண்டு இருந்தார்.

அப்போது, எதிர்பாரா வகையில், போதையில் இருந்த அந்த பெண் தன்னிடம் விசாரணை நடத்திய போலீஸ்காரரை இறுக்கி அணைத்து, முத்த மழை பொழிந்தார். இதைப் பார்த்த மற்றொரு போலீஸ்காரர், சாலையில் சென்ற பெண்களை உதவிக்கு அழைத்து அந்த பெண்ணை பிடித்து இழுத்து பிரித்தார்.

அதன் பின், பெண்ணின் மீது கண்மூடித்தனமாக வண்டி ஓட்டியதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பதற்காக பணத்தை லஞ்சமாக கொடுப்பதற்கு பதிலாக முத்தங்களை லஞ்சமாக கொடுத்தேன் என்று விசாரணையில் அந்த பெண் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.