ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், ரயில்களில் ‘செல்பி’ எடுத்தால் 3 மாத சிறை மற்றும் ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில், எந்த பகுதிக்கு சென்றாலும், அங்குள்ள காட்சியை படம் பிடிக்க அனைவருக்கும் ஆர்வம் ஏற்படுகிறது. அதே நேரத்தில், அந்த காட்சியுடன் சேர்த்து, தங்களையும் படம் பிடிக்கும் மோகம் இக்கால இளசுகளிடம் அதிகளவில் உள்ளது. உடனே தங்களிடம் உள்ள செல்போனை எடுத்து, செல்ஃபி எடுத்து கொள்கின்றனர்.

சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் ‘செல்பி’ எடுப்பவர்கள் கவனக்குறைவாக செயல்பட்டு பல்வேறு விபத்துகளில் சிக்கி பலியாகும் சம்பவம் அதிகமாகவே உள்ளது. பாம்புடன் செல்ஃபி எடுப்பது, பஸ் கூரை மீது நின்று எடுப்பது என்பது உள்பட பல்வேறு விபரீதத்தை சந்திக்கின்றனர்.

இதுபோல் ரயில்களில் செல்ஃபி எடுப்பதால், ரயில் விபத்துகளில் 30 சதவீதம் பேர், இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சமீபத்தில், ஓடும் ரயிலின் படிக்கட்டில் நின்று செல்பி எடுத்த பார்த்தசாரதி என்ற வாலிபர் மின்கம்பத்தில் மோதி இறந்தார். பூந்தமல்லியை சேர்ந்த தினேஷ்குமார் என்ற வாலிபரும் மின்சார ரயிலில் செல்பி எடுக்க முயன்று தவறி விழுந்து இறந்தார்.

இதுபோன்ற உயிரிழப்புகள் இனியும் நடக்காமல் தடுக்க ரயில்வே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதையொட்டி ரயில்கள், ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள் ஆகிய இடங்களில் நின்று செல்ஃபி எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் மீறி செயல்படுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, 3 மாத சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே போலீசார் எச்சரித்துள்ளனர்.