மெட்ரோ நிலையத்தில் இந்தி மொழியை கொண்டு வருவதன் மூலம் கர்நாடகத்தில் இந்தி மொழியை திணிக்க மத்தியஅரசு முயற்சிக்க வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடிதம எழுதி வலியுறுத்தியுள்ளார். 

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில், ஆங்கிலம், கன்னடத்தில் எழுதப்பட்டு இருக்கும் பெயர்பலைக்கு அடுத்தார்போல், இந்தியிலும் பெயர்கள் எழுதப்பட்டன. இதற்கு அந்த மாநிலத்தில் உள்ள கன்னட வேதிகா அமைப்பு உள்ளிட சில அமைப்புகள் கடுமையாக எதிர்த்து, இந்தி எழுத்துக்களை அழித்து பிரச்சினையில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் அந்த மாநிலத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. 

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா, இது குறித்து வருத்தம் தெரிவித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

அந்த கடிதத்தில் “ மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை என்பது நியாயமில்லாதது. எங்கள் மாநிலத்தில் இந்தி மொழியை பயன்படுத்துவது, திணிப்பது என்பது தேவையில்லாதது. இந்த மும்மொழிக் கொள்கையை அமைச்சகம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். பெங்களூரு மெட்ரோ நிலையத்துக்கு உத்தரவிட்டு, அனைத்து பெயர் பலகைகளையும் மாற்றி, இந்தி மொழி இல்லாத அறிவிப்பு பலகையாக மாற்ற உத்தரவிட வேண்டும். கர்நாடக மக்களின் கலாச்சாரம், உணர்வுகள், எண்ணங்களுக்கு மத்தியஅரசு மதிப்பு அளிக்க வேண்டும். கலாச்சாரத் தேவையைத் தவிர்த்து, மாநில மொழியில் அறிவிப்பு பலகை வைப்பதே உள்ளூர் மக்கள் எளிதில் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும். மேலும், கன்னடத்தோடு சேர்த்து, ஆங்கில மொழியும் அறிவிப்பு பலகையில் இடம் பெறலாம். 

பெங்களூரில் உள்ள நம்ம மெட்ரோ ரெயில் நிலையத்தில் மத்திய, மாநில அரசின் நிதி பங்களிப்பு என்பது சரிசமமாக இருக்கிறது. ஆதலால், மாநில அரசுக்கு உகந்த கொள்கைகளையே மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். ஆதலால், இந்தி மொழியை கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு திணிக்க வேண்டாம். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு டிசம்பர் மத்திய நகரபுற மேம்பாட்டு துறை அமைச்சகம் வௌியிட்ட அறிவிப்பின்படி, அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும், மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படும். மாநில மொழி, ஆங்கிலத்தோடு சேர்த்து, இந்தி மொழியிலும் பலகைகளில் அறிவிப்பு எழுதப்படு் எனத் தெரிவித்து இருந்தது. ஆனால், இதற்கு கன்னட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.