சாமியார் குர்மீத் ராம் ரஹீமுக்கு எதிராக சாட்சி அளிக்க அப்போதும் நான் அச்சப்படவில்லை, இப்போதும் அச்சப்படவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

2 பெண்கள்

தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங்கால் நூற்றுக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டதாகப் புகார் எழுந்தும், அவருக்கு எதிராக வாக்குமூலம் அளித்த பெண்கள் இருவர்தான்.

18 பேர் தயார்?

குர்மீத்துக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க 18 பெண்களைத் தயார் செய்திருந்தது சிபிஐ தரப்பு. ஆனால் பல்வேறு மிரட்டல்கள், அழுத்தங்களுக்கு இடையே வாக்குமூலம் அளித்தது இரு பெண்கள் மட்டும்தான். அதுவே அவருக்கு பாலியல் வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க ஏதுவாக இருந்தது.

வாக்குமூலம் அளித்த பெண்களில் ஒருவருக்கு இப்போது 40 வயதாகிறது. அந்த பெண் தான் சாட்சியம் அளித்தது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது-

அச்சமில்லை

கடந்த 2009-ல் முதன்முதலாக சாமியார் குர்மீத்துக்கு எதிராக நான் வாக்குமூலம் அளித்தபோது, அவர் நீதிமன்ற அறையில் இருந்தார். அன்றும் அவரைக் கண்டு நான் பயப்படவில்லை இன்றும் எனக்கு அவர் மீது எவ்வித அச்சமும் இல்லை.

கூடுதல் பாதுகாப்பு

குர்மீத்துக்கு எதிராக பெயரில்லாமல் எழுதப்பட்ட கடிதத்தை பஞ்சாப் மற்றும் ஹரியாணா நீதிமன்றம், கடந்த 2002ம் ஆண்டு சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது. அப்போது இருந்து நான் போலீசாரின் பாதுகாப்பில் வசித்து வருகிறேன். சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும்நாள் அன்று என் வீட்டுக்கு போலீசார் கூடுதலான பாதுகாப்பு அளித்தனர். நான் பாதிக்கப்பட்டதற்கு இப்போதுதான் நீதி கிடைத்துள்ளது'' என்றார்.

சகோதரர் படுகொலை

அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர் ஒருவர் கூறுகையில், “ தேரா சச்சா சவுதாவின் சிர்ஸா தலைமையகத்தில் இயங்கி வந்த கல்லூரியில் அந்தப் பெண் படித்துவந்தார். அப்போதுதான் அவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டார். இப்போது அந்தப் பெண்ணுக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர்.

ஒருகாலத்தில் அப்பெண்ணின் சகோதரர் குர்மீத்தின் தீவிர விசுவாசியாக இருந்தார். தன் சகோதரிக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து பின்னரே அவருக்குத் தெரிய வந்தது.  நீதிபதிக்கு எழுதப்பட்ட கடிதத்தை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர்தான் அனுப்பி இருக்கக்கூடும் என்று சந்தேகப்பட்டு குர்மீத்  2002-ல் அவரை கொலை செய்தார்.

குடும்பத்தினரின் ஆதரவு

வழக்கின் அனைத்து விசாரணைக்கும் அப்பெண்ணின் தந்தையே  சென்று வந்தார். 2009-ல் முதன்முதலாக பெண் வாக்குமூலம் அளித்தார். அப்போது தேரா சச்சா நிர்வாகம் தொடர்ந்து ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வந்தது. நிலைமை கைமீறிச் சென்றபோது எந்தத் தொகையையும் தரத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். ஆனால் பாதிக்கப்பட்ட பெண், தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்'' என்று தெரிவித்தார்.

இறுதி விசாரணை

பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இதன் இறுதி விசாரணை செப்டம்பர் 16-ம் தொடங்குகிறது.