பாதுகாப்பு கேட்டு டாக்டர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அவசர வழக்காக எடுத்து கொள்ளும்படி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அந்த வழக்கை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

கொல்கத்தா என்ஆர்எஸ் அரசு மருத்துவமனையில், கடந்த வாரம் பயிற்சி டாக்டர்  தாக்கப்பட்டார். இதனை கண்டித்து, நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக முதல்வருடன் பேச்சு வார்த்தை நடத்த கோரிக்கை வைத்தனர். அதன்படி நேற்று பேச்சு வார்த்தை நடந்தது. அதில், உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, வேலை நிறுத்தத்தை டாக்டர்கள் கைவிட்டனர்.

இந்நிலையில், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், பாதுகாப்பு பணிக்கு காவலர்கள் நியமிக்கப்பட வேண்டும் என மத்திய உள்துறை மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும், மேற்கு வங்க அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் குப்தா மற்றும் சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு முன் மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் , கோரிக்கை விடுத்தார்.

அந்த மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு,  எந்த உத்தரவையும் பிறப்பிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. விடுமுறை முடிந்த பிறகு, உரிய அமர்வு முன் இந்த மனு பட்டியலிட வேண்டும் என அறிவுறுத்தியது.