மகளிர் இட ஒதுக்கீடு மசோதா: நாடாளுமன்றத்தை தெறிக்க விட்ட கனிமொழி எம்.பி.,!

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான கனிமொழி எம்.பி.யின் பேச்சுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்

DMK MP Kanimozhi Slams BJP on women reservation bill smp

நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநில சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த நிலையில், இந்த மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றை அமல்படுத்திய பிறகே மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் முறை அமலுக்கு வரும் என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தொடக்கிவைத்தார். இதனையடுத்து, இந்த மசோதா குறித்து திமுக எம்பி கனிமொழி பேசத் தொடங்கியபோது, பாஜக எம்.பி.க்கள் கூச்சலிட்டனர். அதற்கு பதிலளித்த கனிமொழி எம்பி., “நான் இன்னும் பேசவே ஆரம்பிக்கவில்லை. அதற்குள் இந்தியில் கூச்சலிட்டால் எப்படி? நீங்கள் இந்தியின் என்ன பேசினாலும் எனக்கு புரியாது.” என பதிலடி கொடுத்தார். மேலும், தந்தை பெரியாரின் பேச்சை மேற்கோள் காட்டி, “பெண்களை மதிக்கிறோம்;  அவர்களின் சுதந்திரத்திற்காகப் பாடுபடுகிறோம் என்ற ஆண்களின் பாசாங்கு பெண்களை ஏமாற்றுவதற்கான சூழ்ச்சி.” என்று சாடினார்.

இதையடுத்து, அங்கிருந்த தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா  சுலே உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கனிமொழிக்கு ஆதரவாக குரல் கொடுத்ததுடன், இதுதான் பாஜக பெண்களுக்கு அளிக்கும் மரியாதையா? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து பேசிய கனிமொழி எம்.பி., இந்த மசோதாவை நாங்கள் ஏற்கிறோம்; ஆதரிக்கிறோம். ஆனால், துரதிருஷ்டவசமாக பாஜக இதனை அரசியலாக்குகிறது என்று சாடினார். பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் முதல்முறையாக 1996ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி செய்த பிரதமர் தேவகவுடா தலைமையிலான அரசு இந்த மசோதாவை அப்போது கொண்டு வந்தது. அந்த மசோதாவை அப்போது திமுக ஆதரித்தது என சுட்டிக்காட்டினார்.

அதன் பிறகு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த மசோதா மீண்டும் கொண்டுவரப்பட்டது. அப்போதெல்லாம் மசோதா நிறைவேறவில்லை. முதல்முறையாக இந்த மசோதா மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அப்போது, இந்த மசோதாவை ஆதரித்து பேசினேன். ஆனால், மசோதா மக்களவையில் நிறைவேறவில்லை என கனிமொழி குறிப்பிட்டார்.

“நான் இந்த மசோதாவை ஆதரித்து 13 ஆண்டுகள் கழித்து தற்போதும் நான் பேசுகிறேன். 13 ஆண்டுகளாக நாம் இது குறித்து பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், சட்டமாக கொண்டுவரப்படவில்லை.” என கனிமொழி சுட்டிக்காட்டினார். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எடுத்த நடவடிக்கையை கனிமொழி அப்போது நினைவு கூர்ந்து பேசினார்.

இந்த மசோதாவை பாஜக ரகசியமாகக் கொண்டு வந்திருப்பதாக தெரிவித்த கனிமொழி, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பது குறித்து உறுப்பினர்கள் யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

அமைச்சர் செந்தில் பாலாஜின் ஜாமீன் மனு தள்ளுபடி!

 பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்ற பாரதியின் பாடலை மேற்கோள் காட்டி பேசிய கனிமொழி எம்.பி., “இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது மனம் முழுமையாக மகிழ்ச்சி அடைகிறது. ஆனால், இது எப்போது அமலுக்கு வரும் என்பது இன்னும் தெரியவில்லை. இந்த மசோதாவை 2024 நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு பாஜக கொண்டு வந்திருப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.” என்றார்.

இந்த மசோதாவை, தொகுதி மறுவரையறையோடு ஏன் தொடர்புபடுத்தி இருக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பிய கனிமொழி எம்.பி., இந்த மசோதா பெண்களுக்கான சலுகை அல்ல; உரிமை என்றார். மேலும், இந்திரா காந்தி, ஜெயலலிதா, சுஸ்மா சுவராஜ், சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, மாயாவதி போன்ற பெண் தலைவர்களை குறிப்பிட்டு பெண்களின் வலிமை பற்றியும் எடுத்துரைத்தார். கனிமொழியின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது. பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios