மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் பணியாளர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயன்பெற உள்ளனர்.

டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி தலைமையில், மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றன.

இந்த கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிவித்தார். அதன்படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 5% உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் 50 லட்சம் மத்திய அரசு பணியாளர்கள், 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள். அகவிலைப்படி உயர்வால் ரூ.16,000 கோடி மத்திய அரசுக்கு கூடுதல் செலவாகும் என்றார்.

மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து இந்தியாவுக்கு வந்த 5,300 குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5.5 லட்சம் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். பிரதான் மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற ஆதார் கட்டாயம் தேவை என்பதை 2019 நவம்பர் 30-ம் தேதி வரை நீட்டிக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது என கூறியுள்ளார்.