Asianet News TamilAsianet News Tamil

ஆபாச படம் பார்க்காவிட்டாலும் பொருளாதாராம் உருப்படியாதான் இருக்குது: இப்படி அடிச்சுத் தூக்கியது யார்? ஏன்?

ஜம்மு - காஷ்மீரில் இணைய சேவை ஆறு மாதங்களாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆபாச படங்களைப் பார்ப்பதற்கும், சமூக வலைதளங்கள் மூலமாக போராட்டங்களை தூண்டிவிடுவதற்கும்தான் இணைய சேவையை பயன்படுத்துகின்றனர். -    சரஸ்வத்  (மெம்பர், நிடி ஆயோக்)

Dirty Films' Were Being Watched Using Internet in Jammu And Kashmir, Says NITI Aayog Member
Author
India, First Published Jan 20, 2020, 6:03 PM IST

*    குடியுரிமை சட்டத்திருத்தம் என்பது, குடியுரிமையை வழங்குவதற்கானது மட்டுமே தவிர, குடியிரிமையை பிடுங்குவதற்கானது அல்ல. கடந்த ஆறு ஆண்டுகளில் பாகிஸ்தானை சேர்ந்த இஸ்லாமியர்கள் உட்பட 2838பேர், ஆப்கானிஸ்தானை சேர்ந்த 914 பேர், வங்க தேசத்தை சேர்ந்த 172 பேருக்கும் இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இப்போது புரிகிறதா உண்மை?
-    நிர்மலா சீதாராமன் (மத்திய நிதியமைச்சர்)

*    இலங்கை ராணுவத்திற்கு பாதுகாப்பு கருவிகளை வாங்க ஐம்பது மில்லியன் டாலர் நிதி! அதாவது முந்நூற்று ஐம்பது கோடி ரூபாய் வழங்கப்படும் என மத்தியரசு அறிவித்திருப்பது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல். இந்த நிதியை, ஈழத்தமிழர்களை ஒடுக்குவதற்கு இலங்கை அரசு பயன்படுத்திடும் ஆபத்து உள்ளது. ஈழத்தமிழர் நலன், தமிழக மீனவர்கள் பாதுகாப்பு குறித்து, இந்தியாவுக்கு அளித்த உறுதிகளை இலங்கை அரசு காப்பாற்றவில்லை என்பதை மத்தியரசு இந்த சூழலில் எண்ணிப்பார்க்க வேண்டும்.
-    டாக்டர். ராமதாஸ் (பா.ம.க. நிறுவனர்)

*    நீலகிரி மாவட்டம் பந்தலூரில் அனைத்து ஜமாத் அமைப்புகள், தி.மு.க. கூட்டணி கட்சியினர் சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பொதுக்கூட்ட மேடையின் முன்வரிசையில் அமர்ந்திருந்தார். கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி உள்ளிட்டோர் பேசுகையில் குட்டி தூக்கம் போட்டார். அருகில் அமர்ந்திருந்த எம்.எல்.ஏ. மீது தூங்கி விழுந்தார்! இதனால் மற்றவர்கள் அதிருப்தியடைந்தனர். 
-    பத்திரிக்கை செய்தி

*    துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசியபோது, ஒரு வரலாற்று நிகழ்வைக் கூறி, துக்ளக் பத்திரிக்கையை பெருமைப்படுத்திக் கூறினார். இதை சிலர் கடுமையாக விமர்சிக்கின்றனர். ரஜினியையும், ஆன்மிக அரசியலையும் இழிவுபடுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இந்து மக்கள் கட்சி தக்க பதிலடி கொடுக்கும். 
-    அர்ஜூன் சம்பத் (இந்துமக்கள் கட்சி தலைவர்)

*    காங்கிரஸ், தி.மு.க.  பிரச்னை குறித்துப் பேசியிருக்கும் அமைச்சர் ஜெயக்குமார் ‘உடைந்த கண்ணாடி ஒட்டாது’ என்று கூறியுள்ளார். தமிழக அமைச்சரவையில் தற்போது வரையில் விஞ்ஞானியாக செல்லூர் ராஜு மட்டுமே  இருந்தார். மற்றொரு விஞ்ஞானியாக ஜெயக்குமாரும் இணைந்துள்ளார். தற்கால விஞ்ஞானத்தின் மூலம் உடைந்த கண்ணாடியையும் ஒட்ட வைக்க முடியும். 
-    கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்)

*    ஆந்திர தலைநகரை அமராவதியிலிருந்து மாற்றும் விஷப் பரீட்சையை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தவிர்க்க வேண்டும். இது போன்ற முடிவுகளால் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை திரும்ப பெறும் அபாயம் ஏற்படும். விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர். பழிவாங்கும் அரசியலை  கைவிட வேண்டும். 
-    சந்திரபாபு நாயுடு (தெலுங்கு தேசம் தலைவர்)

*    உள்ளாட்சி தேர்தலில் எங்களின் வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது. ‘நோட்டாவுடன் போட்டியிடுகிறார்கள்’ என்று காங்கிரஸ் எங்களை கிண்டல் செய்துள்ளது. தனித்து நின்று நாங்கள் இந்த வாக்குகளை, வெற்றியை பெற்றுள்ளோம். ஆனால் திராவிட கட்சிகளின் முதுகின் மீது நாற்பது ஆண்டுகளாக சவாரி செய்தும், எங்கள் அளவுக்கு கூட ஓட்டுக்களை காங்கிரஸால் பெறமுடியவில்லையே. 
-    சீமான் (நாம் தமிழர் கட்சித் தலைவர்)

*    தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி உடைந்த கண்ணாடி போல் ஆகிவிட்டது. அதை ஒட்ட வைக்க முடியாது இனி. ரஜினி கூறியதை வைத்துப் பார்த்தால், கிணற்றுத் தவளை போல் தி.மு.க. உள்ளது. அ.தி.மு.க.வோ சமுத்திரம் போல உள்ளது. பா.ஜ.க.வுடனான எங்களின் கூட்டணியில் எந்த பிரச்னையுமில்லை. மிக சுமூகமாக ஆட்சியும், அரசியலும் சென்று கொண்டிருக்கிறது. 
-    ஜெயக்குமார் (மீன் வளத்துறை அமைச்சர்)

*    தமிழக வேளாண் தொழிலை முற்றிலும் சீர்குலைத்து, காவிரி டெல்டா பகுதிகளை சஹாரா பாலைவனமாக்கும் சதிச்செயல் நடந்து வருகிறது. ஆகவே  ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதி பெறத் தேவையில்லை எனும் புதிய உத்தரவை, மத்தியரசு உடனே திரும்பப் பெற வேண்டும். 
-    மு.க. ஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)
*    ஜம்மு - காஷ்மீரில் இணைய சேவை ஆறு மாதங்களாக துண்டிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பொருளாதாரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. ஆபாச படங்களைப் பார்ப்பதற்கும், சமூக வலைதளங்கள் மூலமாக போராட்டங்களை தூண்டிவிடுவதற்கும்தான் இணைய சேவையை பயன்படுத்துகின்றனர். 
-    சரஸ்வத்  (மெம்பர், நிடி ஆயோக்)

Follow Us:
Download App:
  • android
  • ios