Dinakaran petition dismissed Supreme Court order

இரட்டை இலை வழக்கில் தேர்தல் ஆணையத்தின் இறுதி விசாரணைக்கு தடை இல்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கட்சி பெயர் மற்றும் சின்னம் தொடர்பாக கூடுதல் அவகாசம் கேட்டு டிடிவி தரப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக பிளவுபட்டது. இதனால் கட்சியின் பெயரையும், சின்னத்தையும் தேர்தல் ஆணையம் முடக்கியது.

தற்போது அதிமுகவின் இரு அணிகளாக செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி - ஓ.பி.எஸ். அணியினரும், டிடிவி தினகரன் அனுயினரும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்தில் ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளனர்.

கட்சியின் பெயர், கட்சியின் சின்னம் குறித்து இன்று இறுதி முடிவெடுக்க தேர்தல் ஆணையம் கூறியிருந்தது. இந்த நிலையில், டிடிவி தினகரன் தரப்பினர், இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் இறுதி விசாரணையை ஒத்திவைக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கட்சி பெயர் மற்றும் சின்னம் தொர்பாக கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டும் உச்சநீதிமன்றத்தில் டிடிவி தரப்பினர் முறையிட்டுள்ளனர்.

டிடிவி தினகரனின் இதே கோரிக்கையை நேற்றைய தினம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்திருந்தது. அதே காரணத்துக்காக டிடிவி தினகரன், இன்று உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இந்த வழக்கு, இன்று மதியம் உச்சநீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது. டிடிவி தினகரன் தரப்பு மனுவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொள்ளுமா? இல்லையா என்பது தெரியவில்லை. டிடிவி தினகரனின் கோரிக்கையையேற்று வைக்கப்பட்டால், அது டிடிவி தினகரனுக்கு சாதகமாக அமையும் என்று கூறப்படுகிறது.

கட்சி சின்னம் தொடர்பாக ஆவணங்களைத் தாக்கல் செய்ய, இரண்டு தரப்புக்குமே சமமான நேரம்தான் வழங்கி உள்ளதாகவும், இதற்கு நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்று தலைமை தேர்தல் ஆணையம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நவம்பர் மாதம் 10 ஆம் தேதிக்குள் இரட்டை இலை குறித்து முடிவெடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பான டிடிவி தினகரன் தரப்பில் தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து தலைமைத் தேர்தல் ஆணையத்தில் இது தொடர்பான விசாரணை இன்று 4 மணிக்கு விசாரணை ஆரம்பமாக உள்ளது.