Digital payment
1,590 ரூபாயை டிஜிட்டல் முறையில் பரிமாற்றம் செய்த ‘சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா’ வாடிக்கையாளருக்கு டிஜிட்டல் பேமெண்ட் திட்டத்தின் கீழ் ரூ. ஒரு கோடி பரிசு கிடைத்துள்ளது.குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அதிர்ஷ்டசாலிகளை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி நேற்று தேர்வு செய்தார்.
டிஜிட்டல் பேமெண்ட் திட்டம்
கடந்த ஆண்டு நவம்பர் 9-ந்தேதி பிரதமர் மோடி ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். அதைத்தொடர்ந்து, மக்களை டிஜிட்டல்பரிமாற்றத்துக்கு ஊக்குவிக்கும் வகையில் திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி டிசம்பர் 25-ந்தேதி மக்களுக்கான ‘லக்கி கிராஹாக் யோஜனா’, வியாபாரிகளுக்கான ‘டிஜி தன் வியாபாரி யோஜனா’ திட்டங்களையும் அறிமுகப்படுத்தியது. இதன்படி, மக்களுக்கும், வியாபாரிகளும் ‘டிஜிட்டல்பேமெண்ட்டில்’ பரிமாற்றம் செய்தால், பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
ஒரு கோடி பரிசு
இந்த திட்டத்தில் அதிகபட்சமாக வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ. ஓரு கோடி, 2-வது பரிசாக ரூ.50 லட்சம், ரூ.3-வது பரிசாக ரூ.25 லட்சம் என அறிவிக்கப்பட்டது. அதேபோல, வியாபாரிகளுக்கு ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.12 லட்சம் என தெரிவிக்கப்பட்டது.
அதிர்ஷ்டசாலிகள் தேர்வு
டிஜிட்டல் பேமெண்ட் மூலம் பரிமாற்றம் செய்பவர்களுக்கான பரிசுத் திட்டத்தில் அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்யும் 100-வது குலுக்கல் நிகழ்ச்சி குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடந்தது. குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்தார்.
3 வாடிக்கையாளர்கள்
இதில் முதல்பரிசாக ரூ.1,590யை டிஜிட்டல் பரிமாற்றம் செய்த, சென்ட்ரல் பேங்க்ஆப் இந்தியா வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ. ஒரு கோடி பரிசு கிடைத்தது. 2-வது பரிசாக பேங்க் ஆப் பரோடா வாடிக்கையாளருக்கு ரூ. 50 லட்சம், 3-வது பரிசாக பஞ்சாப் நேஷனல் வாடிக்கையாளர் ரூ.25 லட்சமும் கிடைத்தது. இந்த 3வாடிக்ைகயாளர்களும் ‘ரூபே டெபிட் கார்டு’ மூலம் பரிமாற்றம் செய்த இருந்தனர். இவர்களின் பெயரை அரசு வெளியிடவில்லை.
வர்த்தகர்கள்
அதேபோல வியாபாரிகள் 3 பேருக்கு முறையே ரூ.50 லட்சம், ரூ.25 லட்சம், ரூ.12 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த 6 அதிர்ஷ்டசாலிகளும் வரும் 14-ந்தேதி நாக்பூரில் நடக்கும் அம்பேத்கர் பிறந்நதநாள் நிகழ்ச்சியின் போது, பிரதமர் மோடியின் கையால் பரிசுகள் பெறுவார்கள்.
அரசின் நல்ல தொடக்கம்...
அதிர்ஷ்டசாலிகளை தேர்வு செய்யும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பிரணாப்முகர்ஜி பேசுகையில், “ குறைந்த பணப் பொருளாதார சமூகத்துக்கு மாற இந்தியா நீண்ட பயணம் மேற்கொண்டுள்ளது.மக்களை டிஜிட்டல் பரிமாற்றத்துக்கு மாற வைக்கும் மத்திய அரசின் முயற்சி நல்ல தொடக்கமாக இருக்கிறது. இந்த திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி, வளர்த்து சமுதாயத்தில் அனைத்து பிரிவினர்களும் பங்கேற்க செய்ய வேண்டும். டிஜிட்டல் பொருளாதாரத்தை கொண்டு வர பணப்பரிமாற்றத்தை குறைக்க வேண்டும். இதனால், வெளிப்படைத்தன்மை வளரும். மக்கள் இந்த திட்டங்களை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தும் போதுதான் அரசின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்கும்’’ என்று தெரிவித்தார்.
