மானநஷ்ட வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தகுந்த பதில் அளிப்பேன் என்றும் நீதிமன்றத்தில் நானே வாதிடுவேன் என்றும் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா தெரிவித்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு வழங்கிய சலுகைகள் குறித்த முறைகேடுகளைக் கண்டுபிடித்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா மீது டிஜிபியாக இருந்த சத்யநாராயணராவ் மானநஷ்ஈடு வழக்கு தொடர்ந்துள்ளார்.

சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்க, சத்யநாராயணராவுக்கு, சசிகலா தரப்பிடம் இருந்து 2 கோடி ரூபாய் வாங்கியதற்கான ஆதாரம், சிறப்பு வசதிகள் மற்றும் பரப்பன அக்ரஹாரா சிறையில் கைதிகள் சூதாடுவது, கஞ்சா பயன்படுத்துவது போன்ற முறைகேடுகள் சம்பந்தமாக வீடியோ மற்றும் அது குறித்த புகைப்படங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கும் நடவடிக்கையில் ரூபா ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து ரூபா பேசும்போது, அரசு ஊழியராகவும், நேர்மையாகவும், பொறுப்புள்ள அதிகாரியாகவும், பணியாற்ற வேண்டியது என் கடமை என்றும், சிறையில் முறைகேடுகள் குறித்த நடவடிக்கை எடுக்கும்படி டிஜிபி சத்யநாராயணராவுக்கு அறிக்கை சமர்ப்பித்தேன்.

அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, முறைகேடுகளை தடுக்க அவர் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் எனக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளார். இதன் மூலம் அவர் யாருக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. 

எனக்கு எதிரான மானநஷ்டஈடு வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் தகுந்த பதில் அளிப்பேன். நீதிமன்றத்திற்கு நானே நேரடியாக சென்று வாதாடுவேன். வழக்கு விசாரணை முடிவில், உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.