மத்திய அரசு கடந்த 8ம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை மாற்ற முடியாமல், கடும் அவதியடைந்து வருகின்றனர். இதையொட்டி, கையில் உள்ள பணத்தை அனைத்து வங்கிகளிலும் மாற்றி கொள்ளலாம் என அரசு தெரிவித்தது.
இதைதொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் உள்ள பணத்தை, தங்களது வங்கி கணக்கில் டெபாசிட் செய்து வருகின்றனர். மேலும் சிலர், தங்களுக்கு வங்கியில் கணக்கு இல்லாததால், அதிகாலை முதல் இரவு வரை வங்கியின் வாசலில் கால் கடுக்க காத்திருந்தும், பணம் இல்லாமல் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.
இதற்கிடையில், புரட்டாசி மாதம் முடிந்து ஐப்பசி மாத முதல் முகூர்த்த நாள் கடந்த 9ம் தேதி இருந்தது. முதல் முகூர்த்தம் என்பதால், ஏராளமான திருமணங்கள் அன்று நடந்தன. முன்னதாக 8ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தன. அந்த நேரத்தில்தான் பிரதமர் மோடி, தொலைக்காட்சிகளில் ரூபாய் நோட்டு செல்லாது என அறிவித்தார்.
இதனால், திருமணத்துக்கு வந்தவர்களுக்கு சில்லறை தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் பலர், கவரில் ரூ.500ஐ மொய் பணமாக கொடுத்து சென்றனர். இந்த விபரத்தை அறியாத திருமண குடும்பத்தினர், அடித்தது ஜாக்பாட் என சந்தோஷமடைந்தனர். ஆனால், அடுத்தநாள், பணப்பட்டுவாடா செய்யும்போது, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை யாரும் வாங்கவில்லை. இதனால், கடும் வேதனை அடைந்தனர்.
இதையொட்டி பல திருமணங்கள் சிறிது நாட்கள் தள்ளிப்போடும் நிலைக்கு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் வங்கியில் பணம் எடுக்க முடியாது. அப்படி பணம் எடுக்க சென்றால், வங்கிகளில் காத்திருக்கும் நேரத்தில் திருமண ஏற்பாடுகளை செய்ய முடியாமல் போகும் என ஓரிரு மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளனர்.
இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடந்தது. இந்த திருமணத்துக்கு ஏராளமான உறவினர்களும், நண்பர்களும் சென்றனர். சிலர் புதுஜோடிக்கு பரிசு பொருட்களை கொடுத்தனர். சிலர் மொய் எழுத பணத்தை சில்லறையாக மாற்ற பல்வேறு கடைகளுக்கு அலைந்து கொண்டு இருந்தனர்.
இதை பார்த்த திருமண விழா குடும்பத்தினர், புதிய திட்டத்தை வைத்து இருந்தது அங்கு வந்தவர்களுக்கு தெரிந்ததும் ஆச்சரியம் அடைந்தனர். காரணம், பணம் இல்லாதவர்கள், தங்களிடம் உள்ள கிரெடிட், டெபிட் கார்டுகளை கொண்டு ஸ்வைப் செய்யலாம் என்று அங்கு பரபரப்பாக பேசி கொண்டிருந்தனர்.
இதையடுத்து, மணமக்களை அருகில் சென்று பார்த்தபோது, “மொய் எழுதரவங்க எல்லாம் வரிசையில் வாங்க” என பேசி கொண்டிருந்ததை பார்த்து அருகில் சென்றால், மணமகன் மற்றும் மணமகள் கைகளில் கார்டுகளை ஸ்வைப் செய்யும் மெஷின் வைத்திருந்தனர். இதனை பலர் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
