இந்நிலையில், முதல் தலித் பெண் சன்னியாசி என பெருமையாக சொல்லிக்கொள்ளும் பெண் சீடரான மா நித்யா சுப்ரியானந்தா சுவாமி வெளியிட்ட தகவல் இந்த நிலையில் மிக மிக முக்கியத்துவம் (?) வாய்ந்ததாக கருதப்படுகிறது. ‘’43அவதார திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் 1500 பேர் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களுக்கு பாதபூஜை செய்து தங்கள் குரு பக்தியையும் அன்பையும் பொழிந்தனர்’’என அவர் தெரிவித்துள்ளார். 

இது ஒருபுறமிருக்க, இந்து இந்தியாவை இறக்க விடமாட்டேன் என தெரிவித்துள்ளார் நித்யானந்தா. ’’பகுத்தறிவற்ற பிரிவினைவாதிகள்தான் நம்மை தாக்குகிறார்கள். அவர்களின் கலாசாரத்தை கொண்டு வந்து நமது வாழ்வில் திணித்து தாக்குதல் நடத்துகிறார்கள். கடவுள் என்னை காப்பாற்றிவிட்டார், நான் பழைய இந்தியாவில் உள்ள கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். அந்த இந்து கிராமத்தை கைலாசாவில் உருவாக்குவேன்.

கண்டிப்பாக அதைச் செய்வேன், இந்து இந்தியாவை இறக்க விடமாட்டேன். பகுத்தறிவற்ற பிரிவினைவாதத்தால் எனது பாரதத்தை அழிக்க முடியாது. எந்த கலாசார இனப்படுகொலையாலும் என்னுடைய அருணாசலத்தை அழிக்க முடியாது.

கைலாசா என்பது தீவா அல்லது நாடா? அது எங்கேயிருக்கிறது? என்ற கேள்விகளுக்கு தெளிவான பதில் இல்லை. போதாக்குறைக்கு கைலாசா நாட்டில் இன்னென்ன துறைகள் இருக்கும் என இணையதளத்தில் அறிவித்த நித்யானந்தா, சிறிது‌ நாள் கழித்து கைலாசா என்பது எல்லைகளற்ற ஆன்மீகப் பெருவெளி எனக்கூறிக் குழப்பினார்.

மேலும் E-CITIZEN SHIP மூலம் உலகில் எந்த இடத்தில் இருப்பவர்களும் கைலாசாவில் இணையலாம் என்றும் தெரிவித்தார். இந்த நிலையில் இந்து இந்தியாவை கைலாசாவில் உருவாக்கப்போவதாக ஆவேசத்துடன் கூறியுள்ளார் நித்யானந்தா. கைலாசாவில் தாம் உருவாக்கப் போகும் இந்து இந்தியாவில் நித்யானந்தா வசிக்கப் போகிறாரா அல்லது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படப் போகிறாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.