தீபாவளிப் பரிசாக ஏற்கனவே ஊழியர்களுக்கு கார்களும், வீடுகளும் அளித்து மகிழ்ச்சியில் திளைக்க வைத்த சூரத் வைர வியாபாரி, சவ்ஜி கோபால் தோலக்யா. இப்போது தனது 1200 ஊழியர்களையும் 10 நாள்சற்றுலா அழைத்துச் சென்றுள்ளார்.
இந்த ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்துக்கு சுற்றுலா அழைத்துச் சென்ற வைர வியாபாரி, தனது ஊழியர்கள் சொகுசாக பயணிக்க ரூ. 90 லட்சம் செலவில் ஏ.சி. ரெயிலை மொத்தமாக முன்பதிவு செய்துவிட்டாராம்.
குஜராத் மாநிலம், சூரத் நகரைச் சேர்ந்த வைர வியாபாரி சவ்ஜி கோபால் தோலக்யா. இவர் ஸ்ரீ ராம்கிருஷ்ணா ஏற்றுமதி நிறுவனம் என்ற பெயரில் வைரம் பட்டை தீட்டும் தொழில் செய்து வருகிறார்.
இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் தனது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளிப்பரிசாக கார், வீடுகள் என ஏதாவது கொடுத்து திக்குமுக்காடச் செய்துவிடுவார்.
இந்த ஆண்டும் தனது நிறுவனத்தில் பணிபுரியும் 760 பணியாளர்களுக்கு 400 வீடுகள், 260 கார்களை தீபாவளிப்பரிசாக அளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

கடந்த ஆண்டும் இதே போல், தனது நிறுவனத்தில் பணியாற்றும் 491 ஊழியர்களுக்கு காரும், 200 பேருக்கு ‘பிளாட்டு’களையும் பரிசாக அளித்துஅசத்தினார் அந்த வைர வியாபாரி இந்த பரிசுக்காக சவ்ஜி தோலக்யா ரூ. 51 கோடி செலவு செய்துள்ளார்.
இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால், தனது மகனுக்கு பணத்தின் அருமை குறித்து தெரிய வேண்டும் என்பதற்காக, கேரள மாநிலம், கொச்சியில் 3 செட் ஆடைகள், ரூ. 7 ஆயிரம் பணத்துடன் ஒரு நிறுவனத்தில் வேலைக்கு அமர்த்தினார். அப்போதுதான் பணத்தின் அருமை தனது மகனுக்கு தெரியும், இருக்கும் சொத்தை பாதுகாக்க முடியும் என கூறினார். தனது வித்தியாசமான செயலால் நாடெங்கும் ஊடகங்களில் செய்தியானார்.
இந்நிலையில் தனது ஊழியர்கள் 1200 பேரை 10 நாள் சுற்றுலாவாக உத்தரகாண்ட் மாநிலத்துக்கு அழைத்துச்சென்றுள்ளார் தோலக்யா. இதற்காக ரூ. 90லட்சம் செலவில் ஒரு ஏ.சி. ரெயில் முன்பதிவு செய்தார்.
இது குறித்து வைர நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் எங்களை எங்கள் முதலாளி தீபாவளி நேரத்தில் 10 நாள் சுற்றுலா அழைத்துச் செல்வார். எங்களுடன் ரெயிலில் ஒன்றாகப் பயணித்து எங்கள் குடும்பத்தில் ஒருவராக மாறிவிடுவார். அந்த நாட்களை எங்களால் மறக்க முடியாது.
இந்த சுற்றுலாவுக்காக எங்களுக்கு ஊதியத்துடன் 15 நாள் விடுமுறையும் கொடுத்தார். கடந்த ஆண்டு ரிஷிகேஷ் தலத்துக்கு எங்களை முதலாளி சுற்றுலா அழைத்துச் சென்றார்.
இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை நாங்கள் உத்தரகாண்டில்தான் கொண்டாடினோம். மேலும், கங்கை நதியையும் 500 மீட்டர் அளவுக்கு சுத்தம் செய்தோம் எனத் தெரிவித்தார்.
குஜராத்தின் அமரேலி மாவட்டம் துத்ஹலா கிராமத்தைச் சேர்ந்தவரான சவ்ஜி கோபால் தோலக்யா பணக்கார குடும்பத்தில் பிறந்தவர் அல்ல. தனது மாமாவிடம் கடன் பெற்று இந்த வைர வியாபாரத்தை தொடங்கி, இன்று இந்த அளவுக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
