கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைக்கு பிறகு, தன்னிடம் இருந்த ரூ.6000 கோடியை தொழிலதிபரான வைர வியாபாரி, அரசிடம் ஒப்படைத்தார். இந்த தகவல், வைரலாக பரவி வருகிறது.
கடந்த 8ம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு தடை விதித்தது. இதையடுத்து பொதுமக்கள், தங்களிடம் உள்ள பணத்தை மாற்ற கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும், பணத்தை டெபாசிட் செய்ய பல்வேறு வங்கிகளில் அதிகாலை முதல் மாலை வரை கால் கடுக்க காத்திருக்கின்றனர்.
குறிப்பாக ரூ.2.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். அந்த பணத்துக்கு எவ்வித வரியும் கிடையாது என அரசு அறிவித்துள்ளது.மேலும், வங்கிகளில் ரூ.4,500 வரையும், ஏடிஎம் மையங்களில் ரூ.2,500 வரையும் பணத்தை எடுக்கலாம் என கூறியுள்ளது.
இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்தவர் லால்ஜிபாய் படேல். வைர வியாபாரி. இவர், தன்னிடம் இருந்த ரூ.6000 கோடியை, மத்திய அரசிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்த பணத்துக்கான வட்டி ரூ.1800 கோடி. வரியின் மீது 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்பதால் மேலும் ரூ.3600 கோடி வரி செலுத்த வேண்டும். அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ.5400 கோடி வரிபிடித்தம் செய்யப்பட உள்ளது. இதனால், லால்ஜிபாய்க்கு ரூ.600 கோடி மட்டுமே கையில் நிற்கிறது.
லால்ஜிபாய், தாமாகவே முன்வந்து, தன்னிடம் உள்ள ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்த தகவல் சமூக வலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அணிந்திருந்த கோட், சூட்டை ஏற்கெனவே லால்ஜிபாய் ரூ.4.31 கோடிக்கு ஏலம் எடுத்தார். இதனால், அவர் நாடு முழுவதும் பிரபலமானார். மேலும் அரசின் பெண் குழந்தைகளின் கல்விக்காக ரூ.200 கோடியை நன்கொடையாக கொடுத்தார். தனது நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஆண்டு தோறும் தீபாவளி பண்டிகைக்கு, பரிசாக கார், வீடுகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
