பண மோசடி வழக்கில் சிக்கி பிரிட்டன் தப்பிச் சென்றுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது குறித்து இந்தியா –பிரிட்டன்  உள்துறைச் செயலர் மட்டத்திலான பேச்சுவார்த்தை தலைநகர் புதுடெல்லியில் இன்று நடைபெறவுள்ளது.

இந்திய பொதுத் துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்றுவிட்டு அதை திருப்பிச் செலுத்தாமல் டிமிக்கி கொடுத்து வந்த விஜய் மல்லையா, வங்கிகள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்ததால் இங்கிருந்து தப்பி பிரிட்டனில் பதுங்கியுள்ளார்.

அவரை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டும் என்றும், அவரது சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும், கோரிக்கை வலுத்து வருகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு லண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா, ஒரு சில மணி நேரங்களிலேயே  விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் விஜய் மல்லையாவை நாடு கடத்துவது குறித்து இந்தியா – பிரிட்டன் இடையே உள்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சு வார்த்தை இன்று நடைபெறுகிறது.

இந்திய உள்துறைச் செயலர் ராஜீவ் மகரிஷி, பிரிட்டன் உள்துறைச் செயலர் பேட்ஸி வில்கின்ஸன் ஆகியோர் இடையே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பேச்சு வார்த்தையின்போது  குற்ற நடவடிக்கைகள் தொடர்பான உளவுத் துறை தகவல்களை இரு தரப்பிலும் பரஸ்பரம் பகிர்ந்து கொள்ளும்  ஒப்பந்தத்தை தீவிரமாக செயல்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது.