திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் தரிசன டிக்கெட் வைத்திருக்க வேண்டியது கட்டாயம். டிக்கெட்களை காண்பித்தால் மட்டுமே அலிபிரி சோதனை சாவடியில் அனுமதிக்கப்படுவார்கள்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிபாரிசு கடிதங்களுடன் வருபவர்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனுமதி இல்லை என்று தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
திருப்பதி மலைக்கு வரும் பக்தர்களில் இலவசமாக ஏழுமலையானை வழிபடும் பக்தர்களுக்கு நாளொன்றுக்கு 30,000 என்ற எண்ணிக்கையில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் இலவச தரிசனத்திற்காக ஒதுக்கப்படும் நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதத்தின் மூலம் தரிசனம் செய்யவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தான முதன்மை பாதுகாப்பு அதிகாரி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் தரிசன டிக்கெட் வைத்திருக்க வேண்டியது கட்டாயம். டிக்கெட்களை காண்பித்தால் மட்டுமே அலிபிரி சோதனை சாவடியில் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் அனைவரும் முககவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். அலிபிரி சோதனைச்சாவடியிலிருந்து அதிகாலை 3 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை இரு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும். இருசக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிவது அவசியம். முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதங்களுக்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே அந்த நாட்களில் வருவதை தவிர்க்கவேண்டும். பக்தர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தரிசன தேதிகளில் மட்டுமே திருமலைக்கு வரவேண்டும். திருமலையில் அறைகள் இல்லை என்பதால் பக்தர்கள் தங்கள் உடமைகள், செல்போன் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களை யாத்திரிகள் சமுதாய கூடத்தில் அல்லது தேவஸ்தானத்தின் லாக்கர்களில் வைக்கவேண்டும். திருமலையில் தரிசனம் மற்றும் தங்கும் அறைகளுக்கு எந்த இடைத்தரகர்களையும் நம்பவேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
