மகாராஷ்டிராவில் முதல்வர் பதவியை தேவேந்திர பட்னாவிஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.  

மகாராஷ்டிராவில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நாள் முதல் அரசியல் குழப்பம் நீடித்து வந்தது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை யாரும் எதிர்பாராத விதமாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். இதனால், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் அதிர்ச்சியடைந்தனர். 

இதை எதிர்த்து தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா ஆகிய 3 கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் நாளை 5 மணிக்குள் பெருபான்மையை நிரூபிக்க வேண்டும் என தேவேந்திர பட்னாவிஸ்க்கு உத்தரவிட்டது. இந்த நம்பிக்கை ஓட்டெடுப்பை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும். எவ்வித ரகசியமும் இருக்க கூடாது என உத்தரவில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பதவியேற்ற 4 நாட்களில் துணை முதல்வர் அஜித் பவார் தனது பதவியை ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தேவேந்திர பட்னாவிஸ் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். மேலும், ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்க உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். தங்களுக்கு பெருபான்மை இல்லாததால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரும் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். 

இருவரும் ராஜினாமா செய்ததையடுத்து நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் பாஜக எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து, ஒரிரு நாளில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்க உள்ளார். இதேபோல் அவசர அவசரமாக கர்நாடகாவில் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா பெருபான்மை இல்லாத காரணத்தால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.