deva gowda support to meera kumar

மீரா குமாருக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆதரவு…. முன்னாள் பிரதமர் தேவகவுடா அறிவிப்பு…

குடியரசுத் தலைவர் வேட்பாளராக எதிர்க்கட்சிகள் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள மீரா குமாருக்கு மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜுலை 25 ஆம் தேதியுடன் முடிவடைவதால், அப்பதவிக்கு வரும் 17-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் பாஜக வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இது குறித்து டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் உள்பட 17 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

இதையடுத்து 17 கட்சி தலைவர்களும் ஒருமனதாக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தனர்.


இந்நிலையில், மீரா குமாருக்கு மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தனது ஆதரவை அளித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 40 எம்.எல்.ஏ.க்களும், 3 எம்.பி.க்களும் உள்ளனர். 

முன்னதாக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ராஷ்டீரிய ஜனதா தளம் , திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மீரா குமாருக்கு தங்களது ஆதரவை அளித்துள்ளன.