இதன் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் வசிக்கும் பல லட்சம் பேருக்கு குடிநீர் எட்டாத தொலைவில் தான் உள்ளது.

கோடை காலத்தில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், நிலத்தடி நீர் பற்றாக் குறை காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு கிராமங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டு உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை அடுத்த குசியா கிராமத்தில் வசிக்கும் மக்கள் தண்ணீர் எடுக்க தங்களின் உயிரை பணையம் வைக்கின்றனர். 

இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கும் வீடியோக்களில், பெண்கள் கயிறு கூட இல்லாமல், வெறும் கைகளாலேயே பெரிய கிணற்றில் மிகவும் ஆபத்தான மஉறையில் இறங்கி ஏறும் காட்சிகள் இடம்பெற்று உள்ளன. கிணற்றில் தண்ணீர் சொற்ப அளவிலேயே இருந்த போதிலும், மக்கள் அதனை எடுக்க பெரும் துயரை எதிர்கொண்டு வருகின்றனர். 

கைப்பிடி:

கிணறு அமைந்துள்ள பகுதிக்கு வருவதற்கே அவர்களின் கிராமத்தில் இருந்து அதிக கிலோமீட்டர்கள் நடக்க வேண்டி உள்ளது. இந்த சூழலில், கிணற்றுக்கு வந்ததும், அதில் இருக்கும் சொற்ப நீரை எடுப்பதற்காக எந்த பிடிப்பும் இன்றி கைகளை நம்பி கிணற்றுக்குள் இறங்குகின்றனர். 

வீடியோ காட்சிகளின் படி பெண் ஒருவர் புடவை அணிந்த நிலையில், கிணற்றுக்குள் இறங்குகிறார். இவர் பிடிப்புக்கு கயிறு போன்ற எந்த பொருளையும் பயன்படுத்தாமல், வெறும் கைகளாலேயே இறங்குகிறார். மற்றொரு பெண் கிணற்றுக்குள் தண்ணீர் எடுத்துக் கொண்டு இருந்த நிலையில், சிறிது நேரம் கழித்து கிணற்றில் இருந்து வெளியே வர சுவர்களில் சாதாரணமாக ஏற துவங்குகிறார். 

சுத்தமான நீர்:

கிணற்றில் இறங்கியதும், அதில் இருக்கும் நீரை கயிறுகளால் கட்டப்பட்ட பக்கெட்களில் சிறுக சிறுக பாத்திரங்களை கொண்டு தண்ணீரை நிரப்புகின்றனர். தண்ணீர் நிரம்பியதும் கிணற்றில் இருந்து மீண்டும் சுவர் வழியே மேலே ஏறி வீடு திரும்புகின்றனர். இத்தனை ரிஸ்க் எடுத்து, கிணற்றில் இருந்து அவர்கள் எடுக்கும் தண்ணீரும் சுத்தமாக இல்லை என்பது வீடியோவில் தெளிவாக பதிவாகி உள்ளது.

கோரிக்கை:

“நீண்ட காலமாக நாங்கள் தண்ணீர் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறோம். எங்களின் பிரச்சினைக்கு நிர்வாகம் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை. அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் தேர்தல் சமயத்தில் தான் இங்கு வருரின்றனர். இந்த முறை எங்களுக்கு முறையான தண்ணீர் இணைப்பு வழங்கும் வரை வாக்கு அளிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அரசிடம் இருந்து எங்களின் ஒரே கோரிக்கை தண்ணீர் வினியோகம் மட்டும் தான்,” என்று கிராமத்தில் நிலவும் தண்ணீர் பஞ்சம் குறித்து, குசியாவை அடுத்த பரோ டோலா கிராமத்தில் வசிக்கும் குசும் தெரிவித்தார். 

தண்ணீர் பிரச்சினை:

பா.ஜ.க. கட்சி ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் நல் ஜல் திட்டம் மூலம் ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மாநிலத்தின் டிண்டோரி மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தின் 313 பிளாக்-களில் 84 பிளாக்-களில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக மத்திய பிரதேச மாநிலத்தில் வசிக்கும் பல லட்சம் பேருக்கு குடிநீர் எட்டாத தொலைவில் தான் உள்ளது.