சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது சபரிமலை கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் கோவிலுக்கு வந்தால் புனிதம் பாதிக்கப்படும். மேலும் மாதவிடாய் காரணமாக கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என வாதிடப்பட்டுள்ளது. 

முன்னதாக சபரிமலை கோவிலுக்கு 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் சந்திரசூட், கன்வில்கர் ஆகியோர் கொண்ட 5 பேர் கொண்ட அமர்வில் விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது  பெண்களை கோயிலுக்குள் நுழைய தடை விதிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. 

ஆண்களை போல பெண்களுக்கும் வழிபாடு நடத்த சம உரிமை உள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் சட்டத்தை காட்டி யாருக்கும் பாகுபாடு காட்டக்கூடாது என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சபரிமலை கோயில் நிர்வாகம் சார்பில் பெண்களை அனுமதிக்க முடியாது என கோயில் நிர்வாகம் திட்டவட்டமாக தெரிவித்தது. மாதவிடாய் காரணமாக கோயிலின் புனிதத் தன்மை பாதிக்கப்படும் என வாதிடப்பட்டுள்ளது.